December 20, 2016 தண்டோரா குழு
தில்லி எய்ம்ஸ் மருத்துவமணையில் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை பெற்று வந்த மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பா.ஜ.க. மூத்த தலைவரும், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சருமான சுஷ்மா சுவராஜ், சிறுநீரக கோளாறு காரணமாக தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்த மாதம் சேர்க்கப்பட்டார். அவருக்கு டயாலிசஸ் சிகிச்சை அளிக்கப்பட்டது.
சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தன. இந்நிலையில் டிசம்பர் 10ம் தேதி சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நடந்தது. தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த அவர் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதை அடுத்து கடந்த வாரம் தனி அறைக்கு மாற்றப்பட்டார்.
மருத்துவமனையில் ஓய்வெடுத்து வந்த அவரது உடல்நிலை நல்ல முன்னேற்றம் அடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அதையடுத்து, எதிர்பார்த்தபடி திங்கட்கிழமை (டிசம்பர் 19) அவர் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பியதாக எய்ம்ஸ் மருத்துவமனை செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.