March 1, 2023 தண்டோரா குழு
கோவையில் இன்று கோனியம்மன் கோவில் திருத்தேரோட்டம் இன்று நடைபெற்றது. இதனையொட்டி ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தேரோட்டத்தை காண வருகை புரிந்து சாமி தரிசனம் செய்தனர்.
இந்நிலையில் பிற்பகல் 2:30 மணியளவில் திருத்தேரானது பக்தர்களால் வடம் பிடித்து இழுக்கப்பட்டு தேரோட்டம் துவங்கியது. தேர் நிலை திடலில் துவங்கிய இந்த தேரோட்டம் ஒப்பணக்கார வீதி வழியாக பிரகாசம் பகுதியை வந்தடைந்து, அதனைத் தொடர்ந்து பெரிய கடைவீதி வழியாக வைசியாள் வீதியை அடைந்து மீண்டும் தேர் நிலை திடலை வந்தடைந்தது.
தேர் வலம் வரும் பகுதி முழுவதும் திரண்டு இருந்த பொதுமக்கள் உப்பை மற்றும் மிளகை வீசி அம்மனை வழிபட்டனர். தேரோட்டத்தை காண கோவை மட்டுமின்றி சுற்று வட்டார பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வருகை புரிந்து தேரோட்டத்தை கண்டு மகிழ்ந்தனர். பல்வேறு இடங்களில் தன்னார்வலர்கள் பொதுமக்களுக்கு நீர்மோர், பானகம், குளிர்பானங்கள், பழங்கள், உணவுகள் ஆகியவற்றை வழங்கினர். அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட பாஜக சார்பிலும் பொதுமக்களுக்கு உணவுகள் வழங்கப்பட்டது.
பாஜக செல்வபுரம் மண்டல தலைவர் ராஜா சிதம்பரம், 134வது கிளைத் தலைவர் நந்தகுமார் மற்றும் பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டு பொது மக்களுக்கு உணவு, குளிர்பானங்கள், ஐஸ்கிரீம் ஆகியவை வழங்கினர். இதில் சிறப்பு விருந்தினராக பாஜக தெற்கு மாவட்ட தலைவர் வசந்த் கலந்து கொண்டார்.தேர் சுற்றி வரும் பகுதி முழுவதும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பாதுகாப்பு பணிகளை கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.