April 19, 2023 தண்டோரா குழு
தமிழகத்தில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கறிக்கோழி வளர்ப்பு பண்ணைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் கோவை மாவட்டத்தில் 2,500 கறிக்கோழி வளர்ப்பு பண்ணைகள் செயல்பட்டு வருகின்றன. திருப்பூர் மாவட்டத்தில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கறிக்கோழி வளர்ப்பு பண்ணைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கறிக்கோழி வளர்ப்பு பண்ணை உரிமையாளர்கள் தனியார் கோழி வளர்ப்பு நிறுவனங்களிடம் இருந்து தரப்படும் கோழிக் குஞ்சுகளை வளர்த்து வருகின்றனர்.
தமிழகத்தில் மிகவும் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் கோழிகள் வளர்க்கப்படுகின்றன. கோவை, திருப்பூர் மாவட்டத்தில் இருந்து மட்டும் கேரளாவிற்கு மாதம் ஒன்றுக்கு சராசரியாக 2 கோடி கிலோ கோழிகள் அனுப்பபடுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. கர்நாடக, ஆந்திரா மாநிலங்களுக்கும் கறிக்கோழிகள் அனுப்படுகின்றன.
தற்போது நிலவி வரும் வெயில் காரணமாக கோழிகளின் இறப்பு சதவீதம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக உற்பத்தி குறைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தினமும் 10 லட்சம் கோழி குஞ்சுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. கோவை, திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல் மாவட்டங்கள் தான் தமிழகத்தின் கறிக்கோழிகள் உற்பத்தியில் 75 சதவீதம் பங்கு வகிக்கின்றனர். தினமும் 5 லட்சம் கோழிகள் தமிழகம், கேரளா, கார்நாடக ஆகிய மாநிலங்களில் விற்பனை ஆகின்றன. இத்துறையில் நேரடியாகவும், மறைமுகமாகவும் 10 லட்சம் தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து கறிக்கோழி பண்ணை விற்பனை உரிமையாளர் ரஜேஷ் கூறுகையில்,
‘‘குளிர்காலத்தில் கறிக்கோழி வளர்ப்பில் தினமும் 2 முதல் 3 சதவீதம் கோழிகள் இறப்பு ஏற்படும். தற்போது வெயில் காலத்தில் 10 முதல் 12 சதவீதம் வரை இறப்பு ஏற்படுகிறது. மேலும் வெயில் அதிகம் உள்ளதால் விற்பனையிலும் சரிவு ஏற்பட்டுள்ளது.சுமார் 40 சதவீதம் வரை சரிவு ஏற்பட்டுள்ளது.இதன் காரணமாக தமிழகம் முழுவதும் சுமார் 30 சதவீதம் உற்பத்தி குறைக்கப்பட்டுள்ளது. இதுதவிர கோழி தீவனங்களின் மூலப்பொருள் விலையும் அதிகரித்துள்ளது.இதன் காரணமாக கறிக்கோழி பண்ணை விலை சற்று அதிகரித்துள்ளது. தற்போது பண்ணை விலை கிலோவிற்கு ரூ.105 வரை விற்பனை செய்யப்படுகிறது. கோவை மாவட்டத்தில் மட்டும் ஒரு வாரத்திற்கு 50 லட்சம் கிலோ விற்பனை ஆகும். தற்போது 40 லட்சம் வரை மட்டுமே ஆகிறது. கோடை காலத்தில் இதன் காரணமாக பலரும் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது,” என்றார்.