June 6, 2022
கோவை வெள்ளலூர் பேரூராட்சிக்குட்பட்ட செட்டிபாளையம் சாலையில் மாநகராட்சிக்கு சொந்தமான 650 ஏக்கர் பரப்பளவிலான குப்பைக்கிடங்கு உள்ளது. கோவை மாநகரில் உள்ள 100 வார்டுகளிலும் சேகரிக்கப்படும் குப்பைகள் இந்த கிடங்கில் கொட்டப்படுகிறது. அளவுக்கு அதிகமான குப்பைகள் சேகரமாகும் நிலையில் குப்பைகளுக்கு இடையே மீதேன் எரிவாயு உருவாகி அவ்வப்போது தீ விபத்து ஏற்படுகிறது. குப்பைகள் ஒரே பகுதியில் சேகரிக்கப்படுவதால், தீ மளமளவென பரவி, கரும் புகை மூட்டம் ஏற்படுகிறது.
இதனால், சுற்று வட்டாரப்பகுதிகளில் வசிக்கும் சுமார் 50 ஆயிரம் மக்கள் மூச்சுத் திணறல் உள்ளிட்ட சுவாச கோளாறுகளால் பாதிக்கப்பட்டு கடும் அவதியடைந்து வருகின்றனர். குப்பையை அகற்ற ரூ.60 கோடி செலவில் பயோ-மைனிங் திட்டம் செயல்படுத்தப்பட்டது. தினமும் 2 ஆயிரம் முதல் 2 ஆயிரத்து 500 கனமீட்டர் குப்பை தரம் பிரித்து அழிக்கப்படுகிறது.
இந்நிலையில் கோவை வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் கடந்த 10 ஆண்டுகளாக சுமார் 66 ஏக்கரில் பல லட்சம் மெட்ரிக் டன் குப்பைகள் அளிக்கப்படாமல் இருந்தது. இதனை பயோமைனிங் முறையில் அழித்திட மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்ததன் பயனாக 16 ஏக்கர் அளவில் மக்கும் மற்றும் மக்காத குப்பைகள் அழிக்கப்பட்டு உள்ளது. மீதமுள்ள குப்பைகளை அழிக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. இதனிடையே வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் மியா வாக்கி முறையில் மரக்கன்றுகள் நடவு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘16 ஏக்கர் நிலம் குப்பைகளில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. இதில் ஒரு ஏக்கருக்கு 1000 மரக்கன்றுகள் என 16 ஏக்கரில் 16 ஆயிரம் மரக்கன்றுகள் மியா வாக்கி முறையில் நடவு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் பசுமை சூழல் மீண்டும் உருவாகும்’’ என்றார்.