April 25, 2016 வெங்கி சதீஷ்
இந்த ஆண்டு நடைபெற்றுவரும் சட்டமன்ற தேர்தல்களில் பல்வேறு மாநிலங்களில் பல்வேறு புது விதமான முயற்சிகள் மூலம் அமைதியான வாக்குப்பதிவை நடத்தத் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதில் குறிப்பிடும்படியாக நூறு சதவிகித வாக்குப்பதிவிற்குப் பத்திரிகை அச்சடித்துக் கொடுப்பது, மளிகைக்கடைகளில் பொருட்கள் மீது தேர்தல் தேதியைப் பதித்து கொடுப்பது என பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் புதுச்சேரியில் முதல் முறையாக வேட்பாளர்கள் உறுதி பிரமாணம் செய்ய மேடை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த மேடையில் வேட்பாளர்கள் நின்று வாக்காளர்களுக்கு ஓட்டுக்கு பணம் கொடுக்க மாட்டேன் என்றும் இலவச பொருட்களோ அல்லது செய்ய முடியாத வாக்குறுதிகளோ கொடுக்க மாட்டேன் என உறுதி பிரமாணம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
இது குறித்து கருத்து தெரிவித்த தேர்தல் அதிகாரிகள் இதுவரை இந்த உறுதிமொழி வேட்புமனு படிவத்தில் மட்டுமே இருக்கும்.
அதைப் படித்துவிட்டு பின்னர் கையெழுத்து போடுவார்கள். ஆனால் இந்த முறை அந்த உறுதிமொழியை அங்குக் கூடியிருப்பவர்கள் முன்னிலையில் மேடையில் ஏறி நின்று ஏற்க வேண்டும் எனத் தெரிவித்தனர்.
இதனடிப்படையில் இந்திய கம்யூ தட்டாங்சாவடி வேட்பாளர் சேது செல்வம் மேடையில் நின்று வாக்களிக்க மக்களுக்கு பணமோ பொருளோ கொடுக்கமாட்டேன் என உறுதி அளித்த பொது எடுத்த படம் தான் மேலே உள்ள படம்.