December 9, 2024
தண்டோரா குழு
ஈஷா சார்பில் நடைபெறும் ‘பாரதத்தின் மாபெரும் கிராமப்புற விளையாட்டுத் திருவிழாவான 16 – வது ஈஷா கிராமோத்சவத்தை’ முன்னிட்டு , மண்டல அளவிலான போட்டிகள் வேலூரில் இன்று ( 08/12/2024 ) நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியை வேலூர் தொழிநுட்பக் கல்லூரி துணைத் தலைவர் செல்வம் அவர்கள் துவக்கி வைத்தார் மற்றும் வெற்றி பெற்றவர்களுக்கு வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன்,மேயர் சுஜாதா ஆனந்தகுமார் மற்றும் சின்னத்திரை கலைஞர் ஈரோடு மகேஷ் ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.ஈஷா சார்பில் கிராமங்களுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தப்படுகின்றன.
அந்த வகையில் இந்தாண்டிற்கான முதற்கட்ட கிளஸ்டர் அளவிலான போட்டிகள் கடந்த நவம்பர் மாத வார இறுதி நாட்களில் நடைபெற்றது.இதில் ஆண்களுக்கான வாலிபால் போட்டிகளும்,பெண்களுக்கான த்ரோபால் போட்டிகளும் நடத்தப்பட்டன. இந்த விளையாட்டுப் போட்டிகள் 5 தென்னிந்திய மாநிலங்களான தமிழ்நாடு , ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா , கேரளா மற்றும் யூனியன் பிரதேசமான பாண்டிச்சேரியில் நடைபெற்றது.
மொத்தம் 162 இடங்களில் நடைபெற்ற முதற்கட்ட கிளஸ்டர் போட்டிகளில் 5,000 அணிகளில் 43,000 வீரர், வீராங்கணைகள் பங்கேற்றனர்.இதில் 10,311 பேர் கிராமங்களில் வசிக்கும் குடும்ப பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது,கிளஸ்டர் அளவில் தேர்வான அணிகளுக்கு இரண்டாம் கட்டமாக மண்டல அளவிலான விளையாட்டு போட்டிகள் இன்று தமிழ்நாடு முழுவதும் 6 இடங்களில் நடைபெற்றது.
கோவை,சேலம் திருச்சி திருநெல்வேலி , மதுரை,வேலூர் ஆகிய இடங்களில் நடைபெற்ற போட்டிகளில் மொத்தம் 136 அணிகளும்,ஆயிரக்கணக்கான வீரர் , வீராங்கணைகளும் கலந்து கொண்டனர். வேலூர் வசந்தபுரம்,கொசப்பேட்டை நேதாஜி மைதானத்தில் நடைபெற்ற மண்டல அளவிலான கிராமோத்சவ திருவிழாவை வேலூர் தொழிநுட்பக் கல்லூரி துணைத் தலைவர் செல்வம் அவர்கள் துவக்கி வைத்தார்.
விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகளை வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் அவர்கள் வழங்குகினார்.மேலும் இவ்விழாவில் நடிகரும்,சின்னத்திரை கலைஞருமான ஈரோடு மகேஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வீரர்களை உற்சாகப்படுத்தினர்.வேலூர் மண்டல அளவில் ஆண்களுக்கான வாலிபால் மற்றும் பெண்களுக்கான த்ரோபால் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.இதில் வேலூர் மற்றும் பாண்டிச்சேரி மண்டலத்தில் 9 மாவட்டங்களில் இருந்து 456 அணிகள் கிளஸ்டர் அளவிலான போட்டிகளில் பங்கேற்றன.
இதில் இருந்து மொத்தம் 24 அணிகள் மண்டல அளவிலானப் போட்டிகளுக்கு தேர்வாகின.வேலூரில் மண்டல அளவில் விறுவிறுப்பாக நடைபெற்ற வாலிபால் போட்டிகளின் இறுதியில் முதல் இடத்தை வேலூர் ஸ்போர்ட்ஸ் அகாடமி அணி வென்றது.2 – ஆம் இடத்தை பாண்டிச்சேரியை சேர்ந்த சோழன் அணி வென்றது.அதே போல் த்ரோபால் போட்டிகளில் முதல் இடத்தை தர்மபுரி அணியும், 2 – ஆம் இடத்தை பாண்டிச்சேரி அணியும் வென்றது.இந்த விளையாட்டுப் போட்டிகளுடன் பாரம்பரிய நாட்டுப்புற கலை நிகழ்ச்சியாக கரகாட்டம் நடைபெற்றது.
மேலும் பார்வையாளர்களுக்கான கேளிக்கை விளையட்டுகளும், அனைவருக்கும் இலவச யோக வகுப்புகளும் நடைபெற்றன. இதில் ஆயிரக்கணக்கான பொது மக்கள் தங்கள் குடும்பத்துடன் திரளாக கலந்து கொண்டு விழா நிகழ்ச்சிகளை வெகுவாக கண்டு ரசித்தனர்,மேலும் மண்டல அளவிலான போட்டிகளில் தேர்வான அணிகள் கோவையில் ஆதியோகி முன்பு டிசம்பர் 28 – ம் தேதி மிகப் பிரமாண்டமாக நடைபெற உள்ள தென்னிந்திய அளவிலான இறுதிப் போட்டிகளில் பங்கேற்க உள்ளன.
கிராம மக்களின் வாழ்வியலில் விளையாட்டு போட்டிகள் மூலம் புத்துணர்வு மற்றும் ஆரோக்கியத்தை கொண்டு வரவும் , விளையாட்டை கிராம மக்களின் வாழ்க்கையில் ஒரு அங்கமாக மாற்றவும் கிராமோத்சவ திருவிழாவை ஈஷா ஆண்டுதோறும் நடத்துகிறது.விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்வதால் கிராமப்புற இளைநர்கள் போதை பழக்கங்களுக்கு அடிமையாவதில் இருந்து விடுபடுகின்றனர்.
மேலும் கிராமங்களில் சாதி , மத இன வேறுபாடுகள் தாண்டி மக்கள் ஒன்றிணையும் வாய்ப்பு மேம்படுகிறது . குறிப்பாக கிராமப்புற பெண்கள் குறிபிட்ட வயதிற்கு பிறகு விளையாடுவது இல்லை . இந்த நிலையை மாற்றி அவர்களும் விளையாடுவதற்கான களத்தை கிராமோத்சவ விழா அமைத்து தருகிறது,