September 26, 2021 தண்டோரா குழு
இந்திய ஆட்சிப்பணி (ஐஏஎஸ்) உள்ளிட்ட குடிமைப் பணிகளுக்கான அதிகாரிகளைத் தோ்வு செய்வதற்காக கடந்த ஆண்டு நடைபெற்ற தோ்வுகளின் இறுதி முடிவுகளை மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையம் (யுபிஎஸ்சி) வெளியிட்டுள்ளது.இதில் தமிழ்நாட்டில் இருந்து பலர் தேர்வாகியுள்ள நிலையில் கோவையைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி இளைஞர் தேர்வாகி இருப்பது அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கோவை பீளமேடு பகுதியில் வசிப்பவர்கள் தர்மலிங்கம்–அமிர்தவள்ளி தம்பதியினர். இவர்களது மகன் ரஞ்சித்திற்கு,பிறவியிலேயே செவித்திறன் குறைபாடு இருந்ததால்,அவரது படிப்பிற்காக ஈரோட்டில் இருந்து கோவைக்கு வந்துள்ளனர்.காது கேளாதோருக்கான சிறப்பு பள்ளியில் படித்த ரஞ்சித்.12 ம் வகுப்பில் கோபால்சாமி நாயுடு மேல்நிலைப்பள்ளியில் படித்துள்ளார்.+2 தேர்வில் காது கேளாதோருக்கான பிரிவில் 1117 மதிப்பெண் பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்து அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவிடம் 50 ஆயிரம் ரூபாய் பரிசுத்தொகை பெற்றுள்ளார்.
இதனையடுத்து 2016 ஆம் ஆண்டு மெக்கானிக்கல்.இஞ்சினியரிங் பட்டப்படிப்பை பி.எஸ்.ஜி பொறியியல் கல்லூரியில் முடித்துள்ளார்.இதனை தொடர்ந்து UPSC தேர்வு எழுதிய நிலையில் இந்திய அளவில் 750 இடத்தை ரஞ்சித் பெற்றுள்ளார்.
இது குறித்து அவரது தாய் அமிர்தவல்லி கூறும்போது,
சிறுவயது முதலே வெளியிடங்களுக்கு செல்லும் போது ரஞ்சித்திற்கு நாங்கள் சத்தமாக சொல்லி கொடுப்போம். அப்போது அங்கிருப்பவர்கள் வித்தியாசமாக பார்க்கும் முன்னரே அவர்களிடம் குழந்தை பேச முடியாது, காது கேட்காது என்பதை சொல்லி வளர்த்தோம்.கொரொனா காரணமாக சென்னை தனியார் ஐ.ஏ.எஸ் அகடமியில் ஆன்லைனில் வகுப்புகள் நடத்தப்பட்டதால் அதில் படிக்க ரஞ்சித் மிகவும் சிரமப்பட்ட நிலையில், பி.எஸ்.ஜி கல்லூரி தமிழ் ஆசிரியர் பாரதி உதவியதாக தெரிவித்தார்.
மேலும், தங்களது சொந்ததிலேயே ரஞ்சித் தான் முதல் யு பி எஸ் சி தேர்வானதாகவும், உறவுகள் பெருமைப்படுவதாக தெரிவித்தார்.
இது குறித்து ரஞ்சித் கூறுகையில்,
யு பி எஸ் சி தேர்வினை தமிழில் தான் எழுதினேன். மொழி தனக்கு எங்கும் ஒரு தடையாக இல்லை.பி.எஸ்.ஜி கல்லூரியில் மெக்கானிக்கல் இஞ்சினியரிங் படித்த போது “காம்பஸ் இன்டர்வியூ”வில் செவிகுறைபாட்டை காரணம் காட்டி வேலைக்கு எடுக்காமல் நிறைய நிறுவனங்கள் என்னை நிராகரித்தது.அப்போது என்னால் முடியும் என்று சொல்லியும் கேட்காமல் தனக்கு பணி கிடைக்கவில்லை , அதுவே தனக்கு உந்துதலை ஏற்படுத்தியதாக தெரிவித்தார்.
UPSC தேர்வில் வெற்றி பெற்ற ரஞ்சித்திற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின், ம.நீ.ம கட்சி தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்ட பலரும் பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர்.