May 24, 2017 தண்டோரா குழு
தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் வைகோவுக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2009-ம் ஆண்டு இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக கூறி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மீது தேசத் துரோக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணை மீண்டும் இந்தாண்டு ஏப்ரல் 3-ம் தேதி, எழும்பூர் நீதிமன்றத்தில் வந்த போது வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் இல்லையேல் தன்னை கைது செய்ய வேண்டும் என்று வைகோ மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வைகோவுக்கு ஜாமீன் வழங்க முன் வந்தார். ஆனால் ஜாமீன் பெற மறுத்த வைகோ சிறைக்குச் சென்றார். 50 நாட்களுக்கும் மேலாக புழல் சிறையில் வைகோ அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வைகோ ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார். இதையடுத்து அவருக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.ஜாமீன் தொடர்பாக தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிக்காதது குறிப்பிடத்தக்கது.
பிணாங்கு துணை முதல்வர் ராமசாமியின் இல்லத் திருமண விழாவில் பங்கேற்பதற்காக வைகோ ஜாமீன் கோரியுள்ளார் என்று ம.தி.மு.க. வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றனர்.