October 10, 2017 தண்டோரா குழு
ஆந்திர மாநில போலீஸ் ஒருவர் பைக்கில் குடும்பத்துடன் பயணித்தவர்களை பார்த்து இரு கரங்களையும் தூக்கி பெரியக் கும்பிடு போட்ட புகைபடம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
ஆந்திர மாநிலம் ஆனந்தப்பூர் மாவட்டம் மடகாசிரா பகுதி போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் சுகுப் குமார். இன்று (செவ்வாய்க்கிழமை) சாலை விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு, காவல் நிலையம் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, எதிரே ஹனுமந்த்ரையா என்பவர் பைக்கில் குடும்பத்துடன் பயணித்துள்ளார். அவரது பைக்கில் மனைவி, மகள்,இரு சிறுவர்கள் பைக்கின் பெட்ரோல் டேங்க் மீது அமர்ந்திருந்தனர்.
இதனைக் கண்ட சுகுப் குமார் அவரை பார்த்து நின்றுள்ளார். ஏனெனில், ஹனுமந்த்ரையா பைக்கில் 5 பேர் கொண்ட அவரின் குடும்பத்தைச் சுமந்தே அடிக்கடி பயணிப்பது தான் அவரது வழக்கம். இன்ஸ்பெக்டர் சுகுப்குமார் ஏற்கெனவே பலமுறை அவரை எச்சரித்திருந்தார். அபராதம் விதித்தும் பயன் இல்லை.
இதனால் இம்முறை சுகுப் குமார் வித்தியாசமான ட்ரீட்மென்ட் கொடுக்க நினைத்தார்.’இன்ஸ்பெக்டர் எங்கே அபராதம் விதிப்பாரோ ‘ என்று பயந்து போயிருந்த ஹனுமந்த்ரையாவை பார்த்து சுகுப் குமார் அவரைப் பார்த்து தலைக்கு நேரே இரு கரங்களையும் தூக்கி பெரியக் கும்பிடு போட்டார்.
அவர் கும்பிடு போட்டதும் ஹனுமந்த்ரையாவுக்கு வெட்கமாகிப் போனது. இதையடுத்து இனிமேல்,’ விதிகளை மீறி இரு சக்கர வாகனம் ஓட்டுவதில்லை’ என்று இன்ஸ்பெக்டருக்கு உறுதியளித்தார்.
இது குறித்து போலீஸ் அதிகாரி சுகுப்குமார் கூறுகையில்,
பெட்ரோல் டேங்கில் சிறுவர்களை அமர வைத்தால், அவர்களின் கால்கள் ஹேண்ட்பாரை இடித்துவிட வாய்ப்பு அதிகம். இதனால் தான் பெரும்பாலான விபத்துகள் ஏற்படுகின்றன. இது தெரியாமல் வாகன ஓட்டிகள் சிறுவர்களை பெட்ரோல் டேங்கின் மேல் வைத்து ஓட்டிச் செல்கின்றனர்.
ஒன்றரை மணி நேரம் சாலை விழிப்புணர்வு குறித்து வகுப்பு எடுத்துவிட்டு வந்துகொண்டிருந்தேன். எதிரே ஹனுமந்த்ரையா வழக்கம்போல ஹெல்மெட் அணியாமல் குடும்பத்துடன் வண்டியை ஓட்டிக் கொண்டு போவதைப் பார்த்ததும் எனக்கு மனமே வெறுத்துப் போனது எனக் கூறியுள்ளார்.தற்போது சுகுப் குமார் இரு கரங்களையும் தூக்கி பெரியக் கும்பிடு போட்ட புகைபடம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.