January 13, 2023 தண்டோரா குழு
கோவை மாவட்டம் வ.உ.சி. மைதானத்தில் ஓராண்டில் அரசின் அரும்பணிகள் அணிவகுப்பு குறித்து “ஓயா உழைப்பின் ஓராண்டு, கடைக்கோடி தமிழரின் கனவுகளை தாங்கி” என்ற தலைப்பில் அரசு துறைகளை ஒருங்கிணைத்து அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்கள் குறித்த புகைப்படக் கண்காட்சி மற்றும் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் வரும் 13ம் தேதி முதல் 22ம் தேதி வரை 10 நாட்கள் தினசரி மாலை 4 மணி முதல் இரவு 9 மணிவரை நடைபெறவுள்ளது.
இப்புகைப்படக் கண்காட்சியில் தமிழக முதல்வர் கலந்துகொண்ட நிகழ்ச்சிகள், அரசின் சிறப்பு திட்டங்களான மக்களை தேடி மருத்துவம், இன்னூர் காப்போம் திட்டம், காலை உணவு திட்டம், எண்ணும் எழுத்து, இல்லம் தேடி கல்வி, நான் முதல்வன், கல்லூரி கனவு, பெண்களுக்கான இலவச பேருந்து பயணம், புதுமைப் பெண், நம்ம ஊரு சூப்பரு, மீண்டு மஞ்சப்பை உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள், அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி, அமைச்சர் கலந்துகொண்ட நிகழ்ச்சிகளின் புகைப்படங்கள் உள்ளிட்ட பல்வேறு புகைப்படங்கள் இடம்பெறவுள்ளன.
இப்புகைப்படக் கண்காட்சி நடைபெறும் நாட்களில் தினமும் பள்ளிக்கல்வித் துறை மற்றும் உயர் கல்வித்துறையின் சார்பில் மாணவ, மாணவியரை கொண்டு கலைநிகழ்ச்சிகளும், கலைப்பண்பாட்டு துறை மற்றும் சுற்றுலாத்துறையின் சார்பில் ஒயிலாட்டம், தப்பாட்டம் மற்றும் கிராமியக் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளது.
மேலும், மகளிர் திட்டம் மற்றும் உணவு பாதுகாப்புத்துறையின் சார்பில் மகளிர் சுய உதவிக்குழுக்களை கொண்டு தெருவோர உணவகம் போன்ற அமைப்பில் சிறுதானியம் மற்றும் பல்சுவை உணவுடன் கூடிய அரங்குகள் அமைக்கப்படவுள்ளது. மகளிர் சுய உதவிக்குழுக்களை கொண்டு சமத்துவ பொங்கல் விழாவும் நடைபெறவுள்ளது.
இப்புகைப்படக் கண்காட்சியினை மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று மாலை 6 மணிக்கு வ.உ.சி மைதானத்தில் தொடங்கிவைத்து பார்வையிட உள்ளார்.
இந்நிகழ்ச்சியில் கலெக்டர், மேயர், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி கமிஷனர், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்ளவுள்ளனர்.