February 25, 2017 தண்டோரா குழு
“ஜெயலலிதா குறித்து அவதூறாகப் பேசிய திமுக செயல் தலைவரும், சட்டப் பேரவை எதிர்க்கட்சி தலைவருமான மு.க. ஸ்டாலின் தனது பேச்சுக்குப் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று அ.தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா குறித்து அவதூறாகப் பேசிய ஸ்டாலின் தனது பேச்சைத் திரும்பப் பெறவேண்டும். அத்துடன் அவ்வாறு பேசியதற்காக அவர் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்.
ஜெயலலிதா குறித்து மு.க. ஸ்டாலின் அண்மையில் செய்தியாளர்களிடம் பேசிய போது “கொலைக் குற்றவாளியான ஜெயலலிதா” என்ற வார்த்தையைப் பயன்படுத்தினார்.
அதே போல் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை, வாழப்பாடி பழனிச்சாமி என்றும், காவேரி மேலாண்மை வாரியத்தை காவேரி நடுவர் மன்றம் என்றும் பொது இடங்களில் மு.க. ஸ்டாலின் கூறி வருகிறார். இனியும் துண்டுச் சீட்டு துணையின்றி பேசுவதை மு.க. ஸ்டாலின் நிறுத்திக்கொள்ள வேண்டும்.
உள்ளத்தில் நஞ்சும், உதட்டில் வெல்லமும் கொண்டவர் மு.க. ஸ்டாலின். வாரிக் கொடுத்த வள்ளல், தமிழர்களின் உள்ளத்தில் ஈடு இல்லாத புகழுடன் இருப்பவர் ஜெயலலிதா. அவரைப் பற்றி அவதூறாகப் பேசுவதா? இதற்கு கடும் கண்டனம் தெரிவிக்கிறேன்”
இவ்வாறு டி.டி.வி. தினகரன் கூறினார்.