January 2, 2017 ஜாகர்
தமிழகத்திலேயே முதல்முறையாக ஸ்டிமுலேட்டர் வசதி உள்ளிட்ட நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய முதல் சிறுவர் போக்குவரத்து விழிப்புணர்வு பூங்கா கோவையில் பிப்ரவரி மாதம் செயல்பாட்டுக்கு வர உள்ளது.
கோவை காவலர் பயிற்சிப் பள்ளி மைதானத்தில் சிறுவர்களுக்கான போக்குவரத்து விழிப்புணர்வு பூங்கா 1962 ம் ஆண்டு சுமார் 90 சென்ட் நிலத்தில் தொடங்கப்பட்டது. அதில், போக்குவரத்து விதிமுறைகள், சாலைகளை எவ்வாறு கடப்பது, சாலை விதிகளைப் பின்பற்றுவது குறித்த பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன.
இந்தப் பூங்கா கோவை மாநகர காவல் துறை, ஆயுதப் படையால் பராமரிக்கப்பட்டு வந்தது. கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்தப் பூங்கா பராமரிக்கப்படாததால் சிறுவர்களால் பயன்படுத்த முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டது. இது குறித்து காவல்துறை நடவடிக்கை எடுத்து போக்குவரத்து பூங்காவைப் பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில், கோவை மாநகர காவல் ஆணையர் அ. அமல்ராஜ் உத்தரவின்படி, இந்தப் பூங்காவைப் புனரமைத்து நவீன தொழில்நுட்பத்துடன் சிறுவர்களுக்கான போக்குவரத்து விழிப்புணர்வுப் பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டது. இதில், கோவை மாநகராட்சி, தனியார் நிறுவனங்களின் உதவியுடன் பூங்காவைச் சீரமைக்கும் பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகின்றன.
இந்தப் பூங்காவில் முக்கிய அம்சமாக இரு சக்கர வாகனத் தயாரிப்பு நிறுவனம் ஹோண்டா சார்பில் சாலை விதிகளைப் பின்பற்றி இருசக்கர வாகனங்களை எவ்வாறு இயக்குவது என்பதை கணினி உதவியுடன் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இதில், ஸ்டிமுலேட்டர் கருவியானது (இருக்கையில் இருந்தவாறே அகன்ற கணினித் திரையில் வாகனத்தை இயக்கும் மாயத் தோற்றம் ) வெளிநாட்டிலிருந்து ரூ. 2 லட்சத்துக்கு வாங்கி பூங்காவில் பொருத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் முதல் முறையாக சிறுவர் போக்குவரத்து பூங்காவில் இந்த கருவி பொருத்தப்பட்டது கோவையில் தான்.
இது குறித்து மாநகர காவல் துறை, ஆயுதப் படை ஆய்வாளார் மு. ரவிசந்தர் கூறியதாவது:
போக்குவரத்துப் பூங்காவில் சிறுவர்களைக் கவரும் வண்ணம் தற்போது பணிகள் நடைபெற்று வருகின்றன. கோவையில் உள்ள பிரதான சாலைகளின் மாதிரி வடிவ சாலைகள் , சிக்னல்கள் போன்றவை அமைக்கப்பட்டு வருகின்றன.
சிறுவர்கள் இயக்கும் வகையில் 50 சி.சி. திறன் கொண்ட சிறிய அளவிலான இரு சக்கர வாகனமும், காவலர் கண்காணிப்பு கோபுரம், தொங்கு பாலம் உள்ளிட்ட பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களும் பூங்காவில் இடம் பெற உள்ளன.
போக்குவரத்து விதிகள் குறித்து, ப்ரொஜெக்டர் வசதியுடன் திரைப்பட வடிவில் பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பயிற்சி வகுப்பறையில் ஒரே நேரத்தில் 500 சிறுவர்கள் அமர்ந்து பயிற்சியைப் பெறலாம்.
மகளிர் வாகனங்களை இயக்குவதற்குச் சிறப்பு பயிற்சி அளிக்க ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது. இதற்காக இரண்டு இரு சக்கர வாகனமும் வாங்கப்பட்டுள்ளது.
பள்ளிக் குழந்தைகள் இந்த பூங்காவைப் பயன்படுத்தி வரும் காலங்களில் விழிப்புணர்வுடன் வாகனங்களை இயக்க முடியும்.இவ்வாறு மு.ரவிசந்தர் தெரிவித்தார்.