January 2, 2017 தண்டோரா குழு
குடும்ப அட்டைகளுக்குப் பதிலாக ஸ்மார்ட் கார்டுகளை வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக பொருளாளரும் ,எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஸ்டாலின் திங்கட்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
குடும்ப அட்டைகளின் செல்லத்தக்க காலத்தை 2017-ஆம் ஆண்டு டிசம்பர் 31-ஆம் தேதி வரை நீட்டிப்பதற்காக, குடும்ப அட்டைகளில் உள்தாள் ஒட்டும் பணி தொடங்கியுள்ளது.
ஏழை எளிய மக்களுக்கு அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் வழங்கவும், முகவரிக்கான முக்கிய அடையாள ஆவணமாகவும் திகழும் குடும்ப அட்டை விஷயத்தில் தமிழக அரசு தொடர்ந்து மெத்தனமாக இருந்து வருவது கண்டனத்திற்குரியது.
இந்த அரசு ஆட்சிக்கு வந்தது முதல் தாள் ஒட்டும் பணியில் மட்டுமே அதிக கவனம் செலுத்தி, புதிய “ஸ்மார்ட் கார்டு’ வழங்குவதை தள்ளிப் போட்டுக் கொண்டே வருகிறது. இந்தத் திட்டத்துக்காக ஒதுக்கப்பட்ட ரூ. 318 கோடி நிதி என்ன ஆனது என்பதை, மக்கள் மன்றத்தில் தமிழக அரசு விளக்கமளிக்க வேண்டும். ஏற்கனவே அறிவித்தபடி “ஸ்மார்ட் கார்டு’ வழங்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.