October 5, 2023 தண்டோரா குழு
கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில், மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் நடைபெற்ற 2022ம் ஆண்டிற்கான ஸ்மார்ட் சிட்டி விருதுகள் வழங்கும் விழாவில் கோவை ஸ்மார்ட் சிட்டி பில்ட் எண்விரான்மென்ட் பிரிவில் முதல் பரிசு மற்றும் திட்ட செயல்பாட்டில் சிறந்த சீர்மிகு நகரங்களின் செயல்பாட்டிற்கான இந்தியாவின் தெற்கு மண்டலத்தில் முதல் பரிசு என இரு விருதுகளை மேதகு இந்திய குடியரசு தலைவர் அவர்களிடமிருந்து பெற்றதை, மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் இடம், மாநகராட்சி துணை ஆணையாளர் சிவகுமார் சான்றிதழ்கள் மற்றும் விருதுகளை காண்பித்து வாழ்த்து பெற்று, சான்றிதழ்கள் மற்றும் விருதுகளை ஒப்படைத்தார்.
கோவை ஸ்மார்ட் சிட்டி, விருதுகள் 2022 ஒன்றிய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் ஸ்மார்ட் சிட்டி மிஷன், இயக்குநர் அவர்களால் அறிவிக்கப்பட்டு, கோவை ஸ்மார்ட் சிட்டி பில்ட் எண்விரான்மென்ட் பிரிவில் முதல் பரிசு பெற்றது. ஆர்.எஸ்.புரம், பந்தைய சாலை போன்ற பகுதிகளில் சிறந்த மாதிரி சாலைகள் அமைத்தல், வாலாங்குளம், பெரியகுளம், குறிச்சி குளம், முத்தண்ணன் குளம் உள்ளிட்ட பல்வேறு குளங்கள் புனரமைப்பு மற்றும் மேம்படுத்துதல், பணிகளை சிறப்பாக செயல்படுத்தியதற்காக கோயம்புத்தூர் இந்த விருதிற்கு தேர்வு செய்யப்பட்டு, இந்திய அளவில் 52 நகரங்களிலிருந்து 88 முன்மொழிவுகள் இந்த விருதுக்காக சமர்ப்பிக்கப்பட்டது.
மேலும், சீர்மிகு நகரங்களின் செயல்பாட்டிற்கான கோயம்புத்தூர், இந்தியாவின் தெற்கு மண்டலத்தில் முதல் பரிசுக்கான விருது மேதகு இந்திய குடியரசு தலைவர் அவர்களிடமிருந்து சீர்மிகு நகர திட்ட பொது மேலாளர் பாஸ்கரன், உதவி பொறியாளர் சரவணக்குமார் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
நகரங்களில் ஸ்மார்ட் சிட்டி திட்டங்களின் செயலாக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் சிறந்த நகரங்கள், சிறந்த திட்டப் பணிகள் மற்றும் செயல்படுத்தப்பட்ட புதுமையான திட்டப்பணிகளுக்கு இந்த விருதுகள் வழங்கப்பட்டது. சீர்மிகு நகர திட்டங்களை செயல்படுத்தும் பல்வேறு மாநிலங்களுக்கு இடையில் நடைபெற்ற தேர்வில் தமிழ்நாடு தேசிய அளவில் இரண்டாவது இடம் பெற்றது குறிப்பிடத்தக்கது.