May 9, 2022 தண்டோரா குழு
ஒன்றிய அரசின் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகம் சார்பில் ஸ்மார்ட் சிட்டி இயக்கம் கடந்த 2015-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. நாட்டில் 100 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டு அவை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்டன.இவ்வாறு தேர்வு செய்யப்பட்ட நகரங்களில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இத்திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் சிறந்த நகரங்கள் தேர்வு செய்யப்பட்டு விருதுகள் வழங்கப்படுகின்றன.
ஸ்மார்ட் சிட்டி பணிகளை மேற்கொள்வதில் ஊக்குவிக்கவும், சமூக பணிகளில் உள்ளாட்சி அமைப்புகளின் செயல்பாடுகளை மேம்படுத்தும் நோக்கிலும் இந்த விருதானது வழங்கப்படுகிறது. நடப்பாண்டுக்கான விருது விரைவில் வழங்கப்படவுள்ளது.இதில்,100 நகரங்களைக் கொண்ட பட்டியலில் இருந்து செயல்பாடுகள் அடிப்படையில் 75 நகரங்கள் அடுத்தகட்டத்துக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளன.
ஊரக மேம்பாடு, கலாச்சாரம், பொருளாதாரம், சிறந்த நிர்வாகம் உட்பட பல்வேறு பிரிவுகளில் மதிப்பெண்கள் அளிக்கப்பட்டு, சிறந்த நகரங்கள் தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்படுகிறது. அந்த வகையில் நடப்பாண்டுக்கான போட்டியில் 75 நகரங்கள் இறுதி கட்டத்துக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்த 75 நகரங்களுக்கான பட்டியலில் கோவை மாநகராட்சியும் இடம் பெற்றுள்ளது.
தமிழகத்தில்,கோவை தவிர,சென்னை, திருப்பூர்,மதுரை,சேலம்,தஞ்சாவூர், ஈரோடு, திருச்சிராப்பள்ளி,தூத்துக்குடி, வேலூர், திருநெல்வேலி ஆகிய நகரங்களும் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.