September 21, 2023
கோவை ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனம் சார்பில் ஆர்.எஸ்.புரம் மாநகராட்சிப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள புதிய நவீன கழிப்பறைகள் செப்.21-ம் தேதி (வியாழக்கிழமை) மாணவர்கள் பயன்பாட்டுக்காக திறந்துவைக்கப்பட்டது.
அன்பையும், அறத்தையும் வாழ்வியலாகக் கொண்டுவாழ்ந்த அமுதச் செம்மல் என்.கே.மகாதேவ அய்யரின் நூற்றாண்டு விழாவை,அவரது மகனும், ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநருமான எம்.கிருஷ்ணன் இந்த வருடம் முழுவதும் கொண்டாடத் திட்டமிட்டுள்ளார். இதையொட்டி,இந்த ஆண்டு முழுவதும் ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனம் சார்பில் பொதுமக்களுக்கான நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.
இதன் முதல் பணியாக, கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் 72-வது வார்டுக்கு உட்பட்ட ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில், தமிழ்நாடு அரசின் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.32 லட்சம் மதிப்பில் 50% பங்களிப்பில் ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனம் சார்பில் அமரர் என்.கே.மகாதேவ அய்யர் நினைவு நவீன கழிப்பறைகள் புதிதாக கட்டப்பட்டது.என்.கே.மகாதேவ அய்யரின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு செப்.21ம் தேதி (வியாழக்கிழமை) காலை 9.30 மணியளவில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கோவை மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப் புதிய கழிப்பறையை, பள்ளி மாணவர்களின் பயன்பாட்டுக்காக திறந்து வைத்தார்.
ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு தரமான உணவுப் பொருட்களை கொடுப்பது மட்டுமல்ல, மக்களுக்குப் பயன்தரும் நலத்திட்ட உதவிகளையும் தொடர்ந்து செய்வதே அதன் தலையாய நோக்கம். எனது தந்தையின் நூற்றாண்டு விழாவில் பல்வேறு அறச்செயல்களை மக்களுக்காக செய்யத் திட்டமிட்டுள்ளோம் என்று ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனத் தலைவரும், நிர்வாக இயக்குநருமான எம்.கிருஷ்ணன் தெரிவித்தார்.இந்நிகழ்வில் மாநகராட்சி கல்வி அதிகாரி கே.கே. முருகேஷன், ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் சுந்தரராஜன், 72 வது வார்டு கவுன்சிலர் கார்த்திக் செல்வராஜ், ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனத்தின் நிர்வாகிகள், ஊழியர்கள், மற்றும் மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.