April 27, 2022 தண்டோரா குழு
கோவையில் ஸ்ரீ பத்ரகாளியம்மன்,ஸ்ரீ கருப்பராயர் ஸ்ரீ குருசக்தி நாதர் திருக்கோவில் 13 ஆம் ஆண்டு சித்திரை குண்டம் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
கோவை மாவட்டம், கோவை புதூர் பகுதியில், அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ பத்ரகாளியம்மன், ஸ்ரீ கருப்பராயர் ஸ்ரீ குருசக்தி நாதர் திருக்கோவில் குண்டம் திருவிழா கடந்த 19 ஆம் தேதி கொடியேற்றுதல், காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தொடர்ந்து ,ஒவ்வொரு நாளும்,குருதி பூஜை, சண்டி பூஜாவை தொடர்ந்து ,அபிஷேக ஆராதனைகள் உடன் குண்டம் திறத்தல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து,பரத்தியங்கார தேவி ஹோமம் நடைபெற்றது.
பின்னர் நாக பிள்ளையார் கோவிலில் இருந்து,பட்டு,படைக்கலன் உடன் அம்மன் புறப்பாடு விழாவை தொடர்ந்து,இறுதி நாளான குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி நடைபெற்றது. கோவில் நிர்வாகி சித்தர் சாமி எனும் பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இதில், கோவை புதூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பக்தர்கள், அக்னி சட்டி ,பால்குடம், காவடி ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். பக்தர்கள் 9 அடி மற்றும் 11 அடி நீள வேல்களை அலகு குத்தி பக்தியுடன் வந்தது பக்தர்களை மெய்சிலிர்க்க செய்தது. தாழத் தட்டுகளுடன், அம்மன் ரத ஊர்வலம் நடந்தது.
தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பக்தர்கள் அம்மனை பார்த்து வணங்கியபடியே குண்டம் இறங்கினர். பக்தர்கள் வழிபாடுகளின் இடையில், இரண்டு குதிரைகளும் குண்டத்தில் இறங்கியது குறிப்பிடத்தக்கது.