February 25, 2024 தண்டோரா குழு
ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை, ரோட்டரி கிளப் ஆப் காட்டன் சிட்டி இணைந்து ஷ்ரெனிக் ஜெயந்திலால் பாஃப்னா, சாந்திநிகேதன் சில்க்ஸ் சார்பில் தாய்ப்பால் வங்கி கோவை பச்சாபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா ஊரக மருத்துவ மையத்தில் துவக்கப்பட்டது.
இந்த சேவை தாய்ப்பால் தேவைப்படும் குழந்தைகளுக்காக தொடங்கப்பட்டது.
தாய்ப்பால் தேவைப்படும் குழந்தைகள் மற்றும் தாய்ப்பால் இல்லாத தாய்மார்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இந்தநிலையில் பாலூட்டும் தாய்மார்களை ஊக்குவிக்கவும்,பச்சிளம் குழந்தைகளுக்கு தாய்ப்பால் வழங்கவும் இந்த தாய்ப்பால் வங்கி சேவை தொடக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு தலைமை விருந்தினராக எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ஸ்ரீ டி.லட்சுமிநாராயணசுவாமி தலைமை வகித்தார்.கவுரவ விருந்தினர்களாக ஆர்.எஸ்.மாருதி,திரிஷ்லா ஜெயின், அஜய் குமார் குப்தா, தருண் குமார் ரங்கா, கிருஷ்ணா சமந்த்,பிரசன்னா கோத்தாரி, டாக்டர். நீதிகா பிரபு ஆகியோர் முன்னிலையில் இந்த தாய்ப்பால் வங்கி தொடங்கப்பட்டது.
பச்சாபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா ஊரக மருத்துவ மையத்தில் அமைந்துள்ள தாய்ப்பால் வங்கி 24 மணி நேரம் செயல்படக்கூடிய வசதிபெற்றது. தாய்ப்பால் தேவைப்படும் குழந்தைகள், தாய்மார்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கு, இங்கிருந்து தாய்ப்பால் இலவசமாக வழங்கப்படுகிறது.
ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் நெக்டார் ஆஃப் லைஃப், தாய் பால் வங்கி இன்று வரை 9 லட்சம் மில்லி லிட்டருக்கு மேல் பாலை சேகரித்து,கோவை மற்றும் கொங்கு மண்டலத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஏழை குழந்தைகளுக்கு சுமார் 8.5 லட்சம் மில்லி லிட்டர்களை நன்கொடையாக வழங்கியுள்ளது.