November 27, 2017 தண்டோரா குழு
லவ் ஜிஹாத் வழக்கில் ஆஜரான ஹதியாவுக்கு சேலம் சித்த மருத்துவக் கல்லூரியில் தங்கிப் படிக்க அனுமதி வழங்கிய உச்சநீதிமன்றம், அவருக்கு உரிய பாதுகாப்பை வழங்கவும் உத்தரவிட்டுள்ளது.
கேரளாவை சேர்ந்த அகிலா என்ற பெண் இந்து மதத்தில் இருந்து மாறி, ஹதியா என்று பெயரை மாற்றிக்கொண்டு, இஸ்லாமிய இளைஞரான ஷபின்ஜஹானை திருமணம் செய்து கொண்டார். இதற்கிடையில் தனது மகளை மூளை சலவை செய்து மதம் மாற்றி திருமணம் செய்து கொண்டாக ஹதியாவின் தந்தை கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் அவர்களது திருமணம் செல்லாது என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைஎதிர்த்து ஹதியாவின் கணவர் ஜஹான் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அந்த பெண்ணின் விருப்பத்தின்டிபடியே திருமணம் நடைபெற்றதா என்பதை அறிய அவரை நேரில் ஆஜராக
உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதனையடுத்து ஹதியா இன்று உச்சநீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். அப்போது, தனது கணவருடன் செல்ல அனுமதிக்க வேண்டும் என்று ஹாடியா கேட்டுக்கொண்டார். மேலும் வீட்டை விட்டு சென்று சேலம் சித்த மருத்துவக் கல்லூரியில் தங்கிப் படிக்க தம்மை அனுமதிக்க வேண்டும் என ஹதியா நீதிபதிகளிடம் கோரிக்கை விடுத்தார்.இதை ஏற்ற நீதிபதிகள், சேலம் சித்த மருத்துவக் கல்லூரியில் தங்கிப் படிக்க ஹதியாவுக்கு அனுமதி வழங்கியதுடன், அவருக்கு உரிய பாதுகாப்பை வழங்கவும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர். மேலும், சேலம் கல்லூரி நிர்வாகம், ஹதியா தங்குவதற்கான விடுதி வசதிகளையும் அளிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை குறித்து ஜனவரி மூன்றாவது வாரம் முடிவு செய்யப்படும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.