February 20, 2023 தண்டோரா குழு
ஹிதாயா கல்வி அறக்கட்டளையின் சார்பாக கடந்த 11 ஆண்டுகளாக பெண்களின் கல்வி மேம்பாட்டினை நோக்கமாகக் கொண்டு ‘ஹிதாயா மகளிர் இஸ்லாமியக் கல்லூரி’யை சிறப்பாக நடத்தி வருகிறது. மேலும், ஒழுக்க போதனைகளுடன் பாரதியார் பல்கலைக்கழகத்தின் அங்கீகாரத்துடன் நான்கு பட்டயப்படிப்புகளை‘ஹிதாயா சமுதாயக் கல்லூரி’ மூலம் மாணவியருக்கு வழங்கி வருகிறது.
ஹிதாயா கல்லூரியின் ‘நான்காம் பட்டமளிப்பு விழா’கரும்புக்கடை இஸ்லாமியா மெட்ரிக் பள்ளி மைதானத்தில் நடைபெற்றது.இந்த விழாவில் வெற்றிகரமாக தங்களின் பயிற்சியை முடித்த 68 மாணவியருக்கு ‘ஆலிமா ஹாதியா’ எனும் பட்டம் வழங்கப்பட்டன.
ஹிதாயா மகளிர் இஸ்லாமியக் கல்லூரியின் தாளாளர் மௌலவி.M. முஹம்மது இஸ்மாயில் இம்தாதி அவர்கள் நிகழ்ச்சிக்கு வருகைதந்த அனைவரையும் வரவேற்று உரை நிகழ்த்தினார். ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மாநிலத் தலைவர் மௌலவி ஹனீஃபா மன்பஈ தலைமையுரை நிகழ்த்தினார்.
பாரதியார் பல்கலைக்கழகத்தின் சமூகவியல் துறைத்தலைவர் மற்றும் சமுதாயக் கல்லூரிகளின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் முனைவர் S.சம்பத் குமார் மற்றும் மெட்ராஸ் பல்கலைக்கழகம் மற்றும் பாரதியார் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் முன்னாள் ஆங்கில மொழித்துறையின் பேராசிரியர் முனைவர் R.பழனிவேல் ஆகியோர் சமுதாயக் கல்லூரியில் பயின்று பட்டயப்படிப்பினை வெற்றிகரமாக முடித்த மாணவியருக்கு வாழ்த்துரை வழங்கி சான்றிதழ்களை வழங்கினர்.
தொடர்ந்து,வெற்றிபெற்ற மாணவியரை வாழ்த்தி,அவர்கள் இந்த சமூகத்திற்கு செய்யவேண்டிய பங்களிப்பைக் குறித்து தனது சிறப்புரையில் நினைவூட்டியதுடன் ‘ஆலிமா ஹாதியா’பட்டம் மற்றும் கேடையத்தை வழங்கினார்.
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கோவை மாநகரத் தலைவர் ஜனாப் P.S. உமர் ஃபாரூக் நிறைவுரை நிகழ்த்தினார்.முதல் அமர்வில், பட்டம் பெரும் மாணவியரின் கருத்தரங்கம், பட்டிமன்றம், போட்டிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.இந்நிகழ்வில் அறிஞர் பெருமக்கள், ஆன்றோர்கள்,சமூகத் தலைவர்கள், மாணவிகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.