October 3, 2022 தண்டோரா குழு
கோவை மாவட்டத்தில் ஹைட்ரோபோனிக்ஸ் தோட்டம் அமைக்க தோட்டக்கலைத்துறை சார்பில் விவசாயிகள், பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மண்ணில்லா வோண்மையின் ஒரு வகை ஹைட்ரோபோனிக்ஸ் (நீரியல் வளர்ப்பு) முறையாகும். மண்ணில்லாமல் நேரடியாக நீர் மூலம் செடிகளை வளர்க்கும் முறை தான் ஹைட்ரோபோனிக்ஸ் முறை.
பி.வி.சி பைப்புகளில் என்.எப்.டி சேனலில் குறிப்பிட்ட இடைவெளியில் வட்ட வடிவ துளைகளிட்டு, அதில் சல்லடை போன்ற பிளாஸ்டிக் கப்புகளை வைக்க வேண்டும். இதில், செடிகள் உறுதியாக நிற்பதற்காக பேர்லைட் ஊடகம் பயன்படுத்தப்படுகிறது. இந்த பேர்லைட் ஊடகமானது நீரை உறிஞ்சி ஈரப்பதத்தை தக்கவைத்து கொள்ளும். இந்த முறையில் வேர்பகுதிக்கு நேரடியாக நீர் வழங்கப்படுகிறது. தண்ணீர் பயன்பாடு பெருமளவு குறைகிறது. இதிலிருந்து வெளியேறும் நீர் மறுசுழற்சி செய்தவன் மூலம் மீண்டும் செடிகளுக்கு பயன்படுத்தப்படுகின்றன.
இதனை பராமரிக்கும் முறையும் மிகவும் எளிது. செடிகளுக்கு தேவையான ஊட்டச்சத்துகளை நீருடன் கலந்து செலுத்தும் போது செடிகள் நன்கு செழித்து வளர்கிறது. இந்த முறை விவசாயத்தில் களைகள் அகற்ற வேண்டிய அவசியம் இல்லை.ஆண்டு முழுவதும் காய்கறிகள் மற்றும் கீரை வகைகளை பயிரிட முடியும். தோட்டக்கலை துறை மூலமாக ைஹைட்ரோபோனிக்ஸ் தோட்டம் அமைக்கவும், அதனை ஊக்குவிக்கவும் 50 சதவீத மானியத்துடன் ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் என்.எப்.டி சேனல், தாங்கும் அமைப்பு, குழாய் இணைப்புகள், 40வாட்ஸ் மோட்டார், பெர்லைட் கலவை, வலை அமைப்பிலான 2 இன்ச் தொட்டிகள், 25 லிட்டர் தொட்டி, ஊட்டச்சத்து கலவை, கார அமில நிறங்காட்டி மற்றும் கீரை விதைகள் வழங்கப்படவுள்ளது.ஒரு பயனாளிக்கு ஒரு தொகுப்பு மட்டுமே வழங்கப்படும்.
இதற்கு பயனாளிகளின் தேர்வு இணையவழி மூலம் மட்டுமே நடத்தப்படும். இந்த ஹைட்ரோபோனிக்ஸ் தோட்டம் அமைக்க விருப்பம் உள்ள பயனாளிகள் www.tnhorticulture.tn.gov.in/tnhortnet/login.php என்ற இணையதளம் மூலம் பதிவு செய்து பயன்பெறலாம் என கோவை மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.