February 22, 2022 தண்டோரா குழு
100 சதவீதம் கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வுக்காக கோவையில் இருந்து கேரளா மாநிலம் திருச்சூர் வரை 100 கிமீட்டர் தூரத்தை 2.45 மணி நேரத்தில் சைக்கிளில் சாதனை பயணம் மேற்கொள்கிறார்.
மேற்கு மண்டல போலீஸ் ஐஜி சுதாகர் ஐபிஎஸ் பகல் 2.22 மணிக்கு கோவை-பாலக்காடு தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள கிருஷ்ணா தொழில்நுட்ப கல்லூரி வளாகத்தில் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் ஸ்ரீ கிருஷ்ணா கல்வி குழுமங்களின் நிர்வாக அறங்காவலர் மலர்விழி மற்றும் அறங்காவலர் ஆதித்யா ஆகியோர் இருந்தனர்.
கோவையில் இருந்து பாலகாடு, குதிரான் சுரங்கபாலம் வழியாக திருச்சூர் சென்றடையும் விஷ்ணுராமை திருச்சூர் மாநகர போலீஸ் கமிஷனர் ஆதித்யா ஐபிஎஸ் வரவேற்கிறார். இந்த குறுகிய நேர 100 கிலோமீட்டர் சைக்கிள் சாதனை பயணத்தை ‘‘இண்டியா புக் ஆப் ரிகார்ட்ஸ்’’ நடுவர் ஹரிஷ் முழுவதும் பதிவு செய்கிறார்.இந்த சாதனையை விழிப்புணர்வுக்காக நிகழ்த்தி முடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் விஷ்ணுராம், அதற்கான தீவிர பயிற்சியில் கடந்த சில மாதங்களாக மன அளவிலும் உடல் அளவிலும் பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.
மேலும் இந்த சாதனையை இரண்டில் அமையும் சிறப்பான நாளான 22.02.2022 பகல் 2.22 மணிக்கு தொடங்க முடிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகில் மனிதராக பிறப்பவர்கள் தனது வாழ்நாளில் மக்களுக்கு பயன் தரும் வகையில் ஏதாவது சாதனை படைக்க வேண்டும் என்ற லட்சியம் விரல் விட்டு எண்ணக்கூடிய சிலருக்கு மட்டுமே உள்ளது. அந்த பட்டியலில் கோவை மாவட்டத்தை சேர்ந்த ஜி.டி.விஷ்ணுராம் இடம் பெற்றுள்ளார். ஒவ்வொரு முறையும் புதியதாக சாதிக்க வேண்டும் என்ற இலட்சிய வேட்கை அவருக்கு உள்ளது.
தனது முயற்சி திருவினையாக்கும் வகையில் முதல் முறையாக கடந்தாண்டு ஜூலை 11ம் தேதி பெங்களூரு-நாக்பூர் தேசிய நெடுஞ்சாலையில் 2,152.32 கி.மீட்டர் தூரத்தை கார் பயணம் மூலம் 20 மணி, 40 நிமிடம் 35 வினாடிகளில் பயணம் செய்து முந்தைய சாதனையை முறியடித்து இண்டியா புக் ஆப் ரிகார்டில் இடம் பிடித்தார்.
அதை தொடர்ந்து இரண்டாவது முறையாக நீரிழிவு, உடல்பருமன் தொடர்பாக மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தில் கோவை-கன்னியாகுமரி வரை 623 கி.மீட்டர் தூரத்தை 24 மணி நேரத்திற்குள் சைக்கிள் பயணம் மேற்கொண்ட ஆசிய புக் ஆப் ரெகார்டில், இண்டியா புக் ஆப் ரெகார்டில் தனது புதிய சாதனையை பதிவு செய்தார், மனது வைத்தால் முடியாதது ஏதுமில்லை என்பதை நிரூபித்து மக்களின் நல்வாழ்வியல் விழிப்புணர்வுக்காக முயற்சி மேற்கொண்டு வரும் ஜி.டி.விஷ்ணுராம் முயற்சிக்கு பல தரப்பில் பாராட்டுகள் குவிந்து வருகிறது.
அவரின் சாதனை பயணம் வெற்றி பெற அவரின் நண்பர்கள் ஆதரவுடன் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிக்ஸ்த் கியர் சைக்கிளிங் கிளப் ஏற்பாடு செய்துள்ளது.