April 27, 2016 தண்டோரா குழு
இந்தியாவில் ஆண்,பெண் பாகுபாடு பார்க்கும் சூழல் காலம் காலமாக இருந்து வருகிறது. தற்போதும் பெண்கள் கோவிலுக்குள் வரக்கூடாது, அப்படியும் வந்தால் ஆடை கட்டுபாடுடன் தான் வரவேண்டும் என்ற நிலை இருக்கிறது. சமீபமாக விஸ்வரூபம் எடுத்த இந்த விவகாரம் உச்சநீதி மன்றம் வரை சென்றுள்ளது.
இது ஒருபுறம் இருக்கக் கேரள மாநிலத்தில் 1000 வருடங்கள் பழமைவாய்ந்த மசூதிக்குள் பெண்கள்
செல்ல அனுமதி வழங்கியிருக்கிறது அதன் நிர்வாகம்.
கேரள மாநிலம் கோட்டையத்தில் மீனாட்சிக்கல் ஆற்றங்கரை அருகில் 8ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட “தளதங்கடி ஜும்மா மஸ்ஜித்” என்ற 1000 வருடங்கள் பழமைவாய்ந்த பாரம்பரிய மசூதி உள்ளது.
இந்தியாவின் மிகவும் பழமையான மசூதியாகக் கருதப்படும் இம்மசூதி வளமான கட்டிடக்கலை மரச்சிறப்பங்கள் என அனைத்துச் சிறப்பம்சங்களையும் கொண்டது.
இதுமட்டுமின்றி அம்மசூதியில் சதுரவடிவிலான ஒரு அறையும், அழகிய வடிவில் மரங்களால் செதுக்கிய மேற்கூரையும் என பார்ப்பதற்கு ஒரு அரசனின் அரண்மனை போன்ற வடிவில் இந்த வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இம்மசூதி ‘தாஜ் ஜும்மா மசூதி’ என்றும் அழைக்கப்படுகிறது.
இப்படி 1000 வருடங்கள் பழமைவாய்ந்த இந்த மசூதிக்குள் பெண்கள் இதுவரை அனுமதிக்கப்படாமல் இருந்தனர். இதனால் உலகில் பல நாடுகளில் இருந்து வரும் பெண்கள் இந்த மசூதியின் அழகைக் காண முடியாமல் போனது. தற்போது அவர்களுக்காக வருடத்தில் 2 நாட்கள் மட்டும் திறந்துவிட மசூதியின் நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது.
இது குறித்து மசூதியின் தலைமை இமாம் கூறுகையில்,
பாரம்பரியமிக்க இந்த மசூதியைக் காண உலகில் பல நாடுகளில் இருந்து வரும் பெண்கள் இந்த அழகைப் பார்க்க முடியவில்லை என வருத்தம் தெரிவித்தனர். இதனால் எங்கள் நிர்வாகம் மசூதிக்குள் ஏப்ரல் 24 மற்றும் மே 8 ஆகிய நாட்கள் சரியான உடை அணிந்து வரும் பெண்களுக்கு அனுமதி வழங்க முடிவு செய்துள்ளது.
மேலும், அங்குப் பெண்கள் வழிபாடு நடத்த நாங்கள் அனுமதி வழங்கவில்லை. சுற்றிப்பார்க்க மட்டும் தான் அனுமதித்துள்ளோம், மாறாக அவர்களுக்கு அங்குத் தனியாக வசதிகள் செய்து கொடுத்துள்ளோம் எனவும் தெரிவித்தார்.