October 28, 2016 தண்டோரா குழு
அதிகாரிகளுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சுமுக உடன்பாடு எட்டப்பட்டதையடுத்து, வேலைநிறுத்தப் போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அறிவித்துள்ளனர்.
தீபாவளி போனஸ், பணிச்சுமையைக் குறைத்தல் உள்ளிட்ட 27 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அக்டோபர் 28ம் தேதி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்திருந்தனர். இதையொட்டி, கடந்த வாரம் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
இதனால், தீபாவளி பண்டிகையை அவர்கள் கொண்டாட முடியாத சுழ்நிலை உருவானது . இந்நிலையில், அதிகாரிகளுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதில் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வுக்கான நிலுவைத் தொகை, சலுகை விடுப்புக்கான பணம் திரும்ப அளித்தல் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.
இதனை அடுத்து தாங்கள் அறிவித்த வேலைநிறுத்தப் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அறிவித்துள்ளனர்.
இது குறித்து 08 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில், “பேச்சுவார்த்தையில் சுமுக உடன்பாடு எட்டப்பட்டது. எனவே வேலைநிறுத்தப் போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறப்படுகிறது. ஊழியர்கள் வழக்கம் போல் பணியில் ஈடுபடுவார்கள்” என அறிவிக்கப்பட்டுள்ளது.