November 2, 2016 தண்டோரா குழு
தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதிகளில் நடைபெறும் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் புதன்கிழமை (நவம்பர் 2) நிறைவடைந்தது. 139 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதிகளுக்கான தேர்தல் வருகிற 19-ந் தேதி நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 26-ந் தேதி தொடங்கியது.
இந்த 3 தொகுதிகளிலும் 5 முனைப்போட்டி ஏற்பட்டுள்ளது. அ.தி.மு.க. , தி.மு.க., பா.ஜ. க., பா.ம.க., தே.மு.தி.க. வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் வேட்பு மனு தாக்கல் செய்ய நவம்பர் 2 கடைசி நாளாகும். புதன்கிழமை மதியம் 3 மணி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம்.
வேட்பு மனுக்கள் வியாழக்கிழமை (நவம்பர் 3) பரிசீலனை செய்யப்படுகின்றன. மனுக்களை வாபஸ் வாங்க 5-ந் தேதி கடைசி நாளாகும். அப்போது, வேட்பாளர்களுக்கான சின்னம் ஒதுக்கீடு செய்யப்படுவதுடன், இறுதி வேட்பாளர் பட்டியலும் வெளியிடப்படும்.
நவம்பர் 19-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 22-ம் தேதி ஓட்டுகள் எண்ணப்படுகின்றன. அன்று மதியம் முடிவுகள் வெளியாகும்.இதனிடையே வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு இறுதிநாளான புதன்கிழமை 139 பேர் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது.