February 21, 2017 தண்டோரா குழு
பல்வேறு வசதிகளுடன் கூடி கைபேசி சேவையில் ‘ஜியோ’ தொடங்கப்பபட்டு 170 நாட்களில் 10 கோடி சந்தாதாரர்கள் இணைந்துள்ளனர். இத்தகவலை ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி தெரிவித்தார்.
மும்பையில் நடைபெற்ற ரிலையன்ஸ் நிறுவனத்தின் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முகேஷ் அம்பானி பல்வேறு சலுகைகளை அறிவித்துப் பேசினார்.
அவர் பேசியதாவது:
ஜியோ முதன்மை (ப்ரைம்) வாடிக்கையாளர்களுக்கு 2018 மார்ச் 31ஆம் தேதி வரை இலவச டேட்டா தொடரும். இந்தச் சலுகை ஏற்கனவே இந்த சேவையில் சேர்ந்தவர்களுக்கும், வரும் மார்ச் 31ஆம் தேதிக்குள் சேருபவர்களுக்கும் பொருந்தும். ஜியோ பயன்பாட்டாளர்கள் ஒவ்வொரு மாதமும் 100 கோடி ஜிபி-க்கு அதிகமான டேட்டாவைப் பயன்படுத்தி வருகின்றனர். இது ஒரு நாளைக்கு 3.3 கோடி ஜிபி பயன்பாட்டுக்கும் அதிகமாகும்.
கடந்த 170 நாட்களில் ஒரு நிமிடத்திற்கு 7 வாடிக்கையாளர்களை ஜியோ பெற்றுள்ளது. மொபைல் டேட்டா பயன்பாட்டில் உலகிலேயே இந்தியா முதல் இடத்தில் உள்ளது. தினமும் 5.5 கோடி மணி நேர வீடியோ பயன்பாட்டை ஜியோ மேற்கொண்டு வருகிறது. 2017-ம் ஆண்டு நாட்டின் மக்கள் தொகையில் 99 சதவீத வாடிக்கையாளர்களை ரிலையன்ஸ் ஜியோ பெற்றிருக்கும்.
மேலும், ஏப்ரல் 1ஆம் தேதியில் இருந்து ஜியோ கட்டணம் அமலுக்கு வரும். ஏப்ரல் 1 ஆம் தேதிக்குப் பின்னரும் ”வாய்ஸ் கால்” இலவச சேவை தொடரும்.
போட்டியாளர்களைச் சமாளிக்க கூடுதலாக 20 சதவீத டேட்டாவை ஜியோ வழங்கும். தொலைத் தொடர்பு இயக்குநர்கள் மூலம் டேட்டா திட்டங்கள் கண்காணிக்கப்பட்டு, மேலும், 20 சதவீத டேட்டா அதிகரிக்கப்படும்.
ஜியோ அடிப்படை உறுப்பினர் திட்டத்தில் இணைய வாடிக்கையாளர்கள் மாதத்திற்கு ரூ. 99 செலுத்த வேண்டியிருக்கும்.
முதல் ஆண்டில் இந்தக் கட்டணம் மாதத்திற்கு ரூ.99 ஆக இருக்கும். அடுத்த ஆண்டில் இருந்து இது மாதத்திற்கு ரூ. 303ஆக உயர்த்தப்படும் என்றும் ரிலையன்ஸ் ஜியோ கடந்த 170 நாட்களில் 100 மில்லியன்களுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களைப் பெற்று சாதனையை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது என்றும் அம்பானி கூறினார்.