May 17, 2017 தண்டோரா குழு
எலும்பு மஜ்ஜை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஆந்திர சிறுமி சிகிச்சைக்காக தனது தந்தையிடம் கெஞ்சும் வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. ஆனால் தற்போது அவர் உயிருடன் இல்லை என்பதே சோகம்.
ஆந்திர மாநிலம் விஜயவாடாவை சேர்ந்தவர் சாய்ஸ்ரீ என்ற 13 வயது சிறுமி கடந்தாண்டு ஆகஸ்ட் 24ம் தேதி சாய்ஸ்ரீ-க்கு எலும்பு மஜ்ஜை புற்றுநோய் இருப்பது சோதனையில் தெரியவந்தது.சாய்ஸ்ரீ உயிர்பிழைக்க வேண்டுமானால் எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சையை உடனடியாக செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் கூறிவிட்டதாக கூறப்படுகிறது.
சாய்ஸ்ரீ குழந்தையாக இருக்கும்போதே கருத்து வேறுபாடு காரணமாக தாயும் தந்தையும் பிரிந்து வாழ்கின்றனர். வாழ்க்கை நடத்தவே தாயார் சிரமப்பட்ட நிலையில் மகளின் மருத்துவ சிகிச்சைக்காக அவரால் பணம் செலவழிக்க முடியவில்லை. இதனால், தன்னை காப்பாற்றும்படி கெஞ்சி பெங்களூருவில் வசிக்கும் தனது தந்தைக்கு வாட்ஸ் ஆப்பில் சாய்ஸ்ரீ வீடியோ அனுப்பியுள்ளார். ஆனால் ரூ.30 லட்சம் செலவாகும் என்பதால் சாய்ஸ்ரீயின் தந்தை மறுத்துவிட்டார்.
மேலும், தனக்கு சொந்தமான வீட்டை விற்க அவர் ஒத்துழைக்கவில்லை. இதனால் அறுவை சிகிச்சை நடைபெறாமல் சாய்ஸ்ரீ பரிதாபமாக உயிரிழந்தார்.ஆனால், சாய்ஸ்ரீ அனுப்பிய வீடியோ காட்சியே தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.இந்த விவகாரம் குறித்து மாநில மனித உரிமைகள் ஆணையம் விசாரணை நடத்திவருகிறது.