July 9, 2022
தண்டோரா குழு
இது தொடர்பாக கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி ஸ்ரீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில், அரசு இயற்றியுள்ள தமிழ்நாடு ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் கட்டிட விதிகள் 2019-ன் படி, புதிய கட்டிடங்களுக்கு மின்சாரம் மற்றும் குடிநீர் வழங்க கட்டிடம் முழுமையாக கட்டப்பட்டதற்கான சான்றிதழ் சமர்ப்பிப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
ஆனால், விதி 20(1) இன் கீழ், குடியிருப்பு கட்டிடங்கள் மூன்று குடியிருப்புகளுடன் அல்லது உயரம் 12 மீட்டருக்கு குறைவாக அல்லது பரப்பு 750 சதுர மீட்டருக்கு (8072 சதுர அடி) குறைவாக இருப்பின் கட்டிடம் முழுமையாக கட்டப்பட்டதற்கான சான்றிதழ் சமர்ப்பிப்பதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.அதுமட்டுமல்லாது, எல்லா வகை தொழிற்கூட கட்டிடங்களுக்கு முற்றிலும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் சிறு வணிக கட்டிடங்களுக்கு எந்த ஒரு விதிவிலக்கும் அளிக்கப்படவில்லை.
விதிகளில் உள்ள முரண்பாடால், சிறு மளிகை கடைகள், சிகை அலங்கார கடைகள், சிறு தேநீர் கடைகள், பேக்கரிகள், துணி தைக்கும் கடைகள் போன்ற சிறு நிறுவனங்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன.இச்சிறு நிறுவனங்கள், கட்டிடம் முழுமையாக கட்டப்பட்டதற்கான சான்றிதழ் பெற/சமர்ப்பிக்க முடியாததால் அவர்களுடைய புதிய கட்டிடங்களுக்கு மின்சாரம் மற்றும் குடிநீர் பெற முடியாமல் அவர்கள் வாழ்வாதரம் பாதிக்கப்பட்டு மிகவும் சிரமத்தில் உள்ளனர்.
ஆகவே, சிறு குடியிருப்புகள் மற்றும் தொழிற்கூட கட்டிடங்களுக்கு எவ்வாறு முற்றிலும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளதோ அவ்வாறு சிறு வணிக கட்டிடங்களுக்கும் விதிவிலக்கு அளிக்க வேண்டும். இரண்டாயிரம் சதுர அடிக்கு உட்பட்ட சிறு வணிக கட்டிடங்களுக்கும் கட்டிடம் முழுமையாக கட்டப்பட்டதற்கான சான்றிதழ் சமர்ப்பிப்பதிலிருந்து விதிவிலக்கு அளிக்க வேண்டும்.
அதுபோன்று, இரண்டு தரைதள குடியிருப்பு உள்ள கட்டிடத்தில், விரிவாக்கம் செய்யும்போது மேலே இரண்டு குடியிருப்புகள் கட்டும்போது மொத்த குடியிருப்புகள் எண்ணிக்கை நான்கு ஆகிவிடுகிறது. எனவே குடியிருப்பு கட்டிடங்கள் மூன்று குடியிருப்புகளுடன் என்பதை மாற்றி, நான்கு குடியிருப்புகள் ஆனால் 12 மீட்டருக்கு குறைவாக அல்லது 750 சதுர மீட்டருக்கு (8072 சதுர அடி) குறைவாக இருப்பின் முழுமையாக கட்டப்பட்டதற்கான சான்றிதழ் சமர்ப்பிப்பதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இந்த விஷயத்தில் தலையிட்டு, சிறு தொழில் செய்வோர், நடுத்தர மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.