July 26, 2017 தண்டோரா குழு
ரூ.2000 புதிய நோட்டுகளை அச்சிடுவதை ரிசர்வ் வங்கி நிறுத்தியுள்ளது. அதற்கு பதில் புதிய ரூ.500 மற்றும் ரூ.200 நோட்டுகளை அச்சு அடிப்பதில் மும்முரம் காட்டி வருகிறது.
கருப்பு பணத்தை ஒழிப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி கடந்த நவம்பர் 8ம் தேதி 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தார். அதற்க்கு பதிலாக 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தபட்டது.2000 நோட்டு கொண்டு வரப்பட்டு ஒரு ஆண்டு கூட முடியாத நிலையில், அவற்றை புழக்கத்திலிருந்து ஒழிக்க ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. அதற்கு பதில் புதிய ரூ. 500 மற்றும் ரூ. 200 நோட்டுகளை அடிப்பதில் மும்முரம் காட்டி வருகிறது.
ரூ.1000 நோட்டுக்கள் வாபஸ் பெறப்பட்டதால், அதனை ஈடு செய்யும் வகையில் ரூ.7.4 டிரில்லியன் மதிப்பிலான 3.7 பில்லியன் ரூ.2000 நோட்டுக்கள் அச்சிடப்பட்டுள்ளன. இந்நிலையில், ரூ.200 நோட்டுக்கள் அடுத்த மாதம் அறிமுகப்படுத்தப்பட உள்ளதால் ரூ.2000 நோட்டுக்கள் அச்சிடும் பணி நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி ரூ.2000 நோட்டுக்கள் அச்சிடுவதை மைசூரு பிரின்டிங் பிரஸ் நிறுத்தி உள்ளது.
அடுத்த மாதம் ரூ.200 நோட்டுக்களை அறிமுகம் செய்வதற்காக ஒரு பில்லியன் ரூ.200 நோட்டுக்கள் அச்சிடப்பட்டு வருகிறது. மேலும், ரூ.2000 நோட்டுக்களின் தட்டுப்பாட்டை சமாளிப்பதற்காக ரூ.500 நோட்டுக்கள் அதிகம் அச்சிடப்பட்டு வருவதாகவும் கடந்த 40 நாட்களாக ரூ.500 நோட்டுக்களை ரிசர்வ் வங்கி அதிகம் புழக்கத்தில் விட்டு வருவதாகவும் எஸ்பிஐ வங்கி தெரிவித்துள்ளது.