April 22, 2022 தண்டோரா குழு
கோவை விமான நிலையத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர்,
தமிழகத்தில் கடந்த 10 நாட்களாக அறிவிக்கப்படாத மின்வெட்டால் கிராமப்புற மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்தார். இந்த மின்வெட்டை பார்க்கும் பொழுது 2006 இல் இருந்து 2011 வரை இருண்ட கால ஆட்சியாக இருந்த திமுக ஆட்சியின் ட்ரெய்லர் போல் உள்ளதாக தெரிவித்தார்.
இதற்கு மத்திய அரசு தர வேண்டிய நிலக்கரியை தருவதில்லை என முதல்வர் மற்றும் மின்துறை அமைச்சர் குற்றம்சாட்டி வருகிறார்கள் என தெரிவித்த அவர் அதனை தெளிவுபடுத்த வேண்டியது பாஜகவின் கடமை கூறினார். இந்தியாவில் 2.22 கோடி டன் நிலக்கரி இருப்பில் உள்ளதாகவும், அப்படியிருக்கையில் தமிழகத்தில் மட்டும் வினோதமாக மின்வெட்டு எப்படி வருகிறது? என கேள்வி எழுப்பினார்.
தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் நிலக்கரி இருப்பு இருந்தும் தமிழக அரசு ஏன் 4 பவர் ஸ்டேஷன்களில் உற்பத்தியை நிறுத்தி வைத்தது? தமிழகத்தில் செயற்கை மின்வெட்டை உருவாக்கி தனியாரிடம் மின்சாரத்தை வாங்குவது திமுகவிற்கு கைவந்த கலை எனவும் தெரிவித்தார். மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தமிழகத்திற்கு 72 ஆயிரம் டன் நிலக்கரி தேவை என கூறுகிறார் ஆனால் தமிழகத்திற்கு அது எப்போது தேவை என்றால் தமிழகத்தில் உள்ள 5 மின் உற்பத்தி நிலையங்களும் 85% இருக்கும் பொழுதுதான் 72,000 டன் நிலக்கரி தேவைப்படும் என தெரிவித்தார்.
டேன்ஜெட்கோ நஷ்டத்தில் இருப்பது குறித்து 2006ஆம் ஆண்டிலிருந்து 2022வரை வெள்ளை அறிக்கை வேண்டும் எனவும் தெரிவித்தார். 2006-ல் மின்சாரத்தின் நூதன திருட்டுக்கு சுழி போட்டது திராவிட முன்னேற்றக் கழகம் எனவும் விமர்சித்தார். ஹைதராபாத்தில் உள்ள ஒரு குக்கிராமத்தில் கூட மின்வெட்டு கிடையாது என கூறியவர் தமிழகத்தில் மட்டும் 8 மணி நேரத்தில் இருந்து 10 மணி நேரம் வரை மின்வெட்டு உள்ளதாக தெரிவித்தார்.
தமிழகத்தில் 1 மெகாவாட் சோலார் போட வேண்டும் என்றால் 20 லட்சம் ரூபாய் அமைச்சருக்கு கமிஷன் தர வேண்டும் எனவும் தெரிவித்தார்.கோவையில் இடையர்பாளையத்தில் ஜனவரி 2020ல் டேம்ஜெட்கோ பி.ஜி.ஆர். எனர்ஜிக்கு சப் ஸ்டேசன் போட 224 கோடி பட்ஜெட் போடப்பட்ட நிலையில் தற்போது வரை கல்லும் மண்ணும் மட்டுமே போட்டு நிரவி உள்ளதாக தெரிவித்தார்.
மேலும் எதற்கெடுத்தாலும் மத்திய அரசு தர வேண்டுமென கூறினால் தமிழகத்திற்கு எதற்கு அரசு இருக்க வேண்டும் எனவும் கேள்வி எழுப்பினார். இந்த அரசை தங்களிடம் கொடுத்து விடுங்கள். அனைவரும் அடுத்த வருடத்திற்கு ஜெனரேக்டர் வாங்கி வைத்து கொள்ளுங்கள் 2023க்குள் சொந்தமாக அவரவர்களே பவர் பிளேண்ட் வைத்து கொள்ளுங்கள் என கூறினார்.
இந்த அரசு எந்தவித வேலை செய்யவில்லை எனவும் விமர்சித்தார்.இளையராஜாவிற்கு பாரத ரத்னா விருது கிடைத்தது என்று பாராட்டு விழா நடத்தலாம் எனவும் தெரிவித்தார். தமிழகத்தில் முக கவசம் அணிய வில்லை என்றால் 500 ரூபாய் அபராதம் ஆனால் கவர்னர் மீது கல்லை எடுத்து அடித்தால் மாலையில் பெயில் கிடைத்து விடுகிறது என தெரிவித்த அவர் இதுதான் தமிழகத்தின் சந்தி சிரிக்க கூடிய சட்ட நிலைமையாக இருப்பதாகவும் தெரிவித்தார்.
தமிழகத்தில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மீது பி.சி.ஏ வழக்கு உள்ளதால் நாளையில் சென்னையில் நடைபெறவுள்ள நீதித்துறை விழாவில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ராமனா அருகே அமைச்சர் ரகுபதி அமர்வதற்கு அனுமதி அளிக்கக் கூடாது என ரமணா விற்கு கடிதம் அனுப்பி உள்ளதாகவும் தெரிவித்தார். 10 மாத காலங்களாக சிறந்த காவல்துறை என்ற பெயரை தமிழகம் இழந்து வருவதாகவும் தெரிவித்த அவர், ஆளுநருக்கு கூட பாதுகாப்பு இல்லை என்றால் மக்களை பாதுகாக்க கூடிய காவல்துறை மீது மக்களுக்கு எப்படி நம்பிக்கை வரும் என கேள்வி எழுப்பினார்.
சட்டத்தை பாதுகாக்க கூடிய டிஜிபி கூட வாயை மூடிக் கொண்டிருப்பதாக விமர்சித்தார். மேலும் உதயநிதி ஸ்டாலினின் கமலாலயம் பெற தகுதியில்லை என தெரிவித்த அவர் உதயநிதி ஸ்டாலின் சினிமாவில் நடிப்பதை குறைத்து விட்டு மக்கள் பணி செய்தால் மட்டுமே கமலாலயம் வர அருகதையை பெறுவார் என ரஜினியில் படத்தை எடுத்துக்காட்டி (உதயநிதி ஸ்டாலினின் கார் கமலாலயம் வர ஸ்டார்ட் செய்தால் ஸ்டார்ட் ஆகாது) தெரிவித்தார்.