January 6, 2017 தண்டோரா குழு
இந்தியாவில் விவசாயிகளின் தற்கொலை 2015ம் ஆண்டில் 8007 ஆக உயர்ந்துள்ளது என தேசிய குற்றப் பதிவுக் கழகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் தெரிவித்துள்ளது.
தேசிய குற்றப் பதிவுக் கழகம் வெளியிட்ட புள்ளி விவரம்:
“இந்தியாவில் 2014ம் ஆண்டில் 5650 விவசாயிகள், தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்தனர். இந்த எண்ணிக்கை 2015ம் ஆண்டில் 8007 ஆக உயர்ந்துள்ளது. இதில் மகாராஷ்டிர மாநிலத்தில் 1261 பேரும், மத்தியப் பிரதேசத்தில் 709 பேரும் தற்கொலை செய்து கொண்டனர்ர். தமிழகத்தில் 604 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.”
இந்தப் புள்ளி விவரங்கள்படி விவசாயிகளின் தற்கொலை 42 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் 2014 ம் ஆண்டு முதல் கடும் வறட்சி நிலவி வருகிறது.
2015 ம் ஆண்டும், தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் மிகக் குறைந்த அளவு மழையே பதிவாகியுள்ளது. இதனால், விவசாயத்திற்குப் போதிய தண்ணீர் இல்லாமல் மனம் உடைந்து தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில், தேசியக் குற்றப்பதிவு கழகத்தின் இந்த புள்ளி விவரம் வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.