November 9, 2016 தண்டோரா குழு
ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பினர் நாடுகளின் எண்ணிக்கையை உயர்த்துவதற்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
ஐ.நா. பாதுகாப்பு சபையில் தற்போது அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ரஷியா, சீனா ஆகிய 5 நாடுகள்தான் நிரந்தர உறுப்பினர்களாக உள்ளன. மாறி வரும் சூழலுக்கு ஏற்ப ஐ.நா. பாதுகாப்பு சபையில் பல மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என்றும், நிரந்தர உறுப்பினர் நாடுகளின் எண்ணிக்கையை உயர்த்தி, தன்னையும் நிரந்தர உறுப்பினர் ஆக்க வேண்டும் என்று இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
ஆனால், ஐ.நா. பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பினர் நாடுகளின் எண்ணிக்கையை உயர்த்துவதற்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இது பற்றி ஐ.நா. பொதுச்சபையில் செவ்வாய்க்கிழமை பாகிஸ்தான் தூதர் மலீஹா லோதி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
பாதுகாப்பு சபையின் நிரந்தர உறுப்பினர் நாடுகளின் எண்ணிக்கையை உயர்த்துவதை பாகிஸ்தான் எதிர்க்கிறது. அப்படி நிரந்தர உறுப்பினர் நாடுகளின் எண்ணிக்கையை உயர்த்துவது என்பது ஐ.நா. சபையின் சாசனத்துக்கு எதிரானது.
அதே நேரத்தில், நிரந்தரமில்லா உறுப்பினர்களின் எண்ணிக்கையை உயர்த்துவது என்பது, பாதுகாப்பு கவுன்சிலை மேலும் ஜனநாயக அமைப்பாகவும், வெளிப்படையானதாகவும், பொறுப்பு மற்றும் கடமை மிக்கதாக ஆக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.