May 30, 2017 தண்டோரா குழு
கர்நாடக முதலமைச்சரை பெங்களூரில் சந்திக்க முடியவில்லை என்று புதுதில்லிக்கு சென்று அவரை ஒரு பெண் சந்தித்துள்ளார் என்ற செய்தி பலரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
கர்நாடக மாநிலத்தின் சிக்கபல்லப்பூர் மாவட்டத்தின் பஞ்சாயத் நகரமான குடிபண்டாவை சேர்ந்தவர் முனியம்மா. இவர் பல முறை முதல்வரை சந்திக்க பெங்களூர் சென்றுள்ளார். ஆனால், அவரை சந்திக்க முடியவில்லை. திங்கள்கிழமை(மே 29) மீண்டும் அங்கு சென்றபோது, கர்நாடக முதல்வர் சித்தராமையாவை புதுதில்லிக்கு சென்றுள்ளதாக அறிந்து, ரயில் ஏறி புதுதில்லி சென்றுள்ளார்.
புதுதில்லி சென்ற அவர், முதல்வர் இருந்த அலுவலகத்திற்கு சென்று, அங்கிருந்த அதிகாரிகளிடம், முதல்வரை சந்திக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார். அவர்களும் இது குறித்து சித்தராமையாவிடம் தெரிவித்துள்ளனர். இதை கேட்ட அவர் ஆச்சரியம் அடைந்தார். உடனே, அவர் முனியம்மாவை சந்தித்து, இவ்வளவு தூரம் வந்து தன்னை சந்தித்ததின் நோக்கத்தை கேட்டுள்ளார்.
“பெங்களூரில் நீங்கள் எப்போதும் அதிக வேலையாக இருந்ததால், உங்களை சந்திக்க முடியவில்லை. நீங்கள் இங்கு இருப்பதை தெரிந்துக்கொண்டு, உங்களை சந்திக்க இங்கு வந்தேன். எங்களுடைய 2 ஏக்கர் நிலத்தில் பல ஆண்டுகளாக விவசாயம் செய்து வந்தோம். ஆனால் அதை பெங்களூர் அதிகாரிகள் எடுத்து சென்றுள்ளனர்” என்று கூறியுள்ளார்.
முனியம்மாவின் தைரியம் மற்றும் உறுதிப்பாட்டால் முதல்வர் ஈர்க்கப்பட்டார். உடனே பெங்களூர் துணை ஆணையாளர் தீப்தி கண்டேவுடன் தொடர்புக்கொண்டு, முனியம்மாவின் பிரச்சனைக் குறித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
பின்னர், அவருக்கு உணவு வழங்கும் படி சித்தராமையா அதிகாரிகளை கேட்டுக்கொண்டார். வீடு திரும்புவதற்கு முனியம்மாவிடம் பணம் இல்லை என்று அறிந்த அவர், அவருக்கு 2௦௦௦ ரூபாய் தந்துள்ளார்.
இந்த செய்தியை அறிந்த முனியம்மாவின் மகன் முனிக்கிருஷ்ணப்பா அதிர்ச்சி அடைந்துள்ளார். “நில பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும் என்று சொல்லி, நான்கு நாட்களுக்கு முன் வீட்டை விட்டு வெளியே சென்றார். அவர் பெங்களூருக்கு சென்றிருப்பார் என்று நாங்கள் நினைத்துக் கொண்டிருந்தோம். அவர் புதுதில்லிக்கு சென்றிருப்பார் என்று நினைக்கவில்லை” என்று தெரிவித்தார்.
குடிபண்டாவின் தாசில்தார் நஞ்சப்பா கூறுகையில்,
“அந்த நிலத்திற்கான சில முக்கிய ஆவணங்களை முனியம்மா தரவில்லை. அந்த நிலத்தை திருப்பி தர வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தார். அப்படி தருவது சட்டப்படி குற்றம் என்று கூறினோம். முனியம்மா தொடர்ந்து வற்புறுத்தி கொண்டிருந்தால், பி.ஆர். அம்பேத்கர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 1.5 ஏகர் நிலம் அவருக்கு கொடுத்தோம். ஆனால், தன்னிடமிருந்து எடுத்துக்கொண்ட அனைத்து நிலத்தையையும் திருப்பி தரவேண்டும் என்று முனியம்மா கோரிக்கை விடுத்துள்ளார்” என்று தெரிவித்தார்.
மேலும் “நான் முனியம்மாவுடன் பேசி, சரியான நடவடிக்கை எடுப்பேன்” என்று பெங்களூர் துணை ஆணையர், தீப்தி கண்டே கூறினார்.