April 3, 2017 தண்டோரா குழு
வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும், பயிர்க்கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து 21 நாட்களாக தமிழக விவசாயிகள் தில்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தில்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகளை இன்று(ஏப்ரல் 3) பஞ்சாப் கிசான் யூனியனைச் சேர்ந்த சுமார் 3000 விவசாயிகள் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.
இதனை அடுத்து போராட்ட ஒருங்கிணைப்பாளர் அய்யாகண்ணு செய்தியாளர்களிடம் கூறியதாவது;
“நாங்கள் அனாதை என்று நினைத்திருந்தோம். ஆனால் இன்று பஞ்சாப் கிசான் யூனியனைச் சேர்ந்த விவசாயிகள் 3000 பேர் எங்களை வந்து சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளனர். பிரதமர் மோடி எங்களை சந்தித்து பேசவில்லை என்றால் பஞ்சாப், ஹரியானா, உ.பி, உத்தரகாண்ட், ஜம்மு காஷ்மீர், இமாச்சல் பிரதேஷ் ஆகிய மாநிலங்களில் உள்ள அனைத்து விவசாயிகளை ஒன்றுகூட்டி டெல்லியை முற்றுகையிடுவோம்.
வறட்சி காரணமாக வாங்கிய கடனை கட்ட முடியாமல் 2008 -ம் ஆண்டு முதல் தவித்து வருகின்றோம். எங்களுடைய பிரச்சனைகளுக்கு கடன் தள்ளுபடி செய்தால் மட்டும் போதாது. நிரந்தரமான தீர்வை எட்ட வேண்டும்.
நதிகளை இணைத்து தண்ணீர் கொடுக்கும் வரை கடன் தள்ளுபடியை கேட்பது எங்களது உரிமை. அதனை செய்ய வேண்டியது மத்திய அரசின் கடமை. ஏனென்றால் மத்திய அரசால் எங்களுக்கு தண்ணீர் கொடுக்க முடியவில்லை.”
இவ்வாறு அவர் கூறினார்.