November 3, 2021 தண்டோரா குழு
கோவை மாநகராட்சியில் 2533 நிரந்தர தூய்மைப்பணியாளர்களுக்கு ரூ.19 லட்சத்து 77 ஆயிரத்து 757 மதிப்பீட்டில் சீருடைகள் வழங்கும் பணியினை மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி துவங்கி வைத்தார்.
பின்னர் அமைச்சர் செந்தில்பாலாஜி பேசுகையில்,
‘‘கோவை மாநகராட்சியில் தூய்மை மற்றும் சுகாதாரம் பேணும் வகையில் பணிபுரிந்துவரும் அனைத்து நிரந்தர தூய்மைப் பணியாளர்களுக்கு ஆண்டு தோறும் இரண்டு செட் சீருடைகள், காலனி மற்றும் சீருடைகளுக்கான தையற்கூலி ஆகியன வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி 2021-ம் ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு முதற்கட்டமாக அரசு துறை நிறுவனத்தின் மூலம் 2533 தூய்மை பணியாளர்களுக்கு ரூ.19.77 மதிப்பீட்டில் சீருடைகள் வழங்கப்படவுள்ளது,’’என்றார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சமீரன், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம், மாநகராட்சி கமிஷனர் ராஜ கோபால் சுன்கரா, தெற்கு மண்டல உதவி கமிஷனர் அண்ணாதுரை மற்றும் பலர் கலந்து கொண்டனர்.