February 13, 2017
தண்டோரா குழு
கோவையில் 28-வது சாலை பாதுகாப்பு வார விழா ஞாயிற்றுக்கிழமை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, மரக்கன்றுகளை நடுவது, இரு சக்கர வாகனங்களின் பேரணி ஆகியவையும் இடம்பெற்றன.
“நிழல் மையம்” என்ற அமைப்பும் காவல் துறையும் இணைந்து இதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டன.
இவ்விழாவின் ஒரு பகுதியாக பொதுமக்களுக்குத் தலைகவசம் அணிவதன் பலன் குறித்த விழிப்புணர்வுப் பேரணி ஏற்படுத்த 65 இரு சக்கர வாகனங்களில் தலைக்கவசம் அணிந்து கொண்டு கோவையின் முக்கிய சாலைகள் வழியாக மக்கள் மற்றும் மாணவர்கள் பேரணியாகச் சென்றனர்.
பேரணியை கோவை மாநகர போக்குவரத்து காவல் துறை துணை ஆணையர் எஸ் சரவணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். அதன் பின்னர் “நிழல் மையம்” அமைப்பு சார்பாக சாலை போக்குவரத்தினால் சுற்றுச்சுழலுக்கு ஏற்படும் மாசு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த கோவை சிவானந்தா காலனி பகுதியில் 15 மரக்கன்றுகள் நடப்பட்டன.
“பொதுமக்களுக்குச் சாலைப் பாதுகாப்பு மற்றும் சுற்றுசுழல் குறித்த விழிப்புணர்வு தேவை. அதனை ஏற்படுத்தும் விதமாக இந்த இரண்டு நிகழ்ச்சிகளும் ஞாயிற்றுக்கிழமை கோவையில் நடைபெற்றது மிகிழ்ச்சி அளிக்கிறது. தலைக்கவசம் அணிந்து சாலை விதிகளைப் பின்பற்றி வாகனங்களை இயக்கினால் உயிரிழப்பைத் தவிர்க்கலாம். சாலை விபத்துகளைத் தடுக்கலாம்” என்று கோவை மாநகர போக்குவரத்து காவல்துறை துணை ஆணையர் எஸ். சரவணன் “தண்டோரா” இணையத்திடம் கூறினார்.