April 9, 2022 தண்டோரா குழு
கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள சிந்தாமணிபுதூரில் கடந்த 2015-ம் ஆண்டு காரில் சென்று கொண்டிருந்த 4 பேர் மீது வேனில் வந்த ஒரு கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் தாக்கியது. மேலும் துப்பாக்கியால் அந்த கும்பல் சுட்டனர். இதில் சம்பவ இடத்திலேயே 3 பேர் உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் கோவையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக 20-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.இந்த படுகொலையில் தொடர்புடைய கூலிப்படையின் தலைவன் என்று கருதப்படும் திண்டுக்கல்லை சேர்ந்த பிரபல ரவுடியான மோகன்ராம் (வயது 45) மும்பையில் வைத்து சூலூர் போலீசார் கடந்த 2018-ம் ஆண்டு கைது செய்தனர்.
இதையடுத்து கோவைக்கு அழைத்து வரப்பட்ட மோகன்ராம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் அவர் மீது குண்டர் சட்டமும் போடப்பட்டது.பிரபல ரவுடியான மோகன்ராம் மீது திண்டுக்கல், திருப்பூர், மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் 8 கொலை வழக்குகள் உள்பட 11 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர் கடந்த 2013-ம் ஆண்டு நில அபகரிப்பு வழக்கு தொடர்பாக கோவை அத்திப்பாளையத்தில் உள்ள ஒரு வீட்டில் வைத்து கோவை மாநகர் போலீசாரால் கைது செய்யப்பட்டு திருப்பூர் போலீசில் ஒப்படைக்கப்பட்டார்.
பின்னர் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்த அவர் தலைமறைவாக இருந்த நிலையில், 3 பேர் கொலை சம்பந்தமாக கடந்த 2018-ம் ஆண்டு கைது செய்யப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.இதனிடையே மோகன்ராமுக்கு கடந்த சில நாட்களுக்கு முன் சென்னை ஐகோர்ட்டு ஜாமீன் வழங்கியது. இதையடுத்து நேற்று காலை கோவை மத்திய சிறையில் இருந்து மோகன்ராம் விடுவிக்கப்பட்டார்.