August 26, 2016 தண்டோரா குழு
விழுப்புரம் மாவட்டம் திருகோவிலூரை அடுத்த ஏமப்பூர் கிராமத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி இயங்கி வருகிறது. இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் நகைக் கடன், விவசாய கடன் உள்ளிட்ட அனைத்து வகையான வரவு செலவுகளையும் பராமரித்து வந்தனர்.
இந்த வங்கிக் கிளையில் பல ஆண்டுகளாக நகைக்கடன் மற்றும் பயிர்கடன் கொடுக்கப்படாமலேயே, கொடுத்ததாகக் கணக்கு காட்டப்படுவதாகக் குற்றச்சாட்டு இருந்து வந்தது.
இதையடுத்து விழுப்புரம் வணிகவியல் குற்ற புலனாய்வு பிரிவு காவல்துறையினர், வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் வங்கியின் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி திடீரென பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
தொடர்ந்து அவர்கள் மேற்கொண்ட விசாரணையில், இந்த வங்கியில் இதுவரை 2 கோடியே 32 லட்சத்திற்கும் அதிகமான பணம் கையாடல் செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து வங்கியின் முன்னாள் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, வங்கியின் துணை செயலாளர் காத்தவராயன் எழுத்தர் சுப்பிரமணியம் ஆகியோரை இன்று காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த திடீர் கைதால் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.