December 23, 2016 தண்டோரா குழு
கொத்தடிமைத் தொழிலில் ஈடுபடுத்துவதற்காகக் கடத்தப்பட்ட 33 சிறுவர்கள் உட்பட 70 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
அதிர்ச்சி தரும் இந்தச் சம்பவம் சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தர் மாவட்டத்தில் நடந்திருக்கிறது.
அவர்கள் செங்கல் சூளைகள், தொழிற்சாலைகளில் கொத்தடிமைகளாகப் பணியாற்றுவதற்காக ஒரு பஸ்ஸில் கடத்திச் செல்லப்பட்டனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் பஸ்தரில் அந்தப் பேருந்தை வழிமறித்து, அதில் இருந்தவர்களை மீட்டனர்.
“அந்தப் பேருந்தில், 20 சிறுவர்கள், 13 சிறுமிகள் உள்பட 70 பேர் இருந்தனர். அவர்கள் சில ஆயிரம் ரூபாய்க்காக விற்கப்பட்டுள்ளனர்” என்று சிறுவர் பாதுகாப்பு அலுவலர் விஜய் சங்கர் சர்மா தெரிவித்தார்.
அவர்களை ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் உள்ள ஆலை அதிபர்களுக்கு விற்கப்பட்டுள்ளனர் என்றும், இந்தச் சம்பவம் தொடர்பாக கடத்தல் கும்பலைச் சேர்ந்த ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.
மீட்கப்பட்ட சிறுவர்கள் மறுவாழ்வு மையத்தில் வைக்கப்பட்டுள்ளனர். பிறகு, அவர்களது வீடுகளுக்கு அனுப்பப்படுவர்.கடத்தப்பட்ட சிறுவர்கள் பிச்சை எடுக்க வைக்கப்படுவார்கள் சிறுமிகள் விபசாரத்தில் தள்ளப்படுவார்கள் என்றும் போலீசார் தெரிவித்தனர்.
அவர்கள் பஸ்தர் மாவட்டப் பகுதிகளைச் சேர்ந்த பழங்குடியினர். அவை மாவோயிஸ்டுகள் நடமாட்டம் உள்ள பகுதிகளாகும்.
அந்தக் கடத்தல் கும்பல், அவர்களுக்கு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ஆசை வார்த்தை காட்டி கடத்துவதாகத் தெரிகிறது.இந்தியாவில் 1 கோடியே 40 லட்சம் பேர் இவ்வாறு கொத்தடிமைகளாகக் கடத்தி வைக்கப்பட்டுள்ளனர் எனப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதுபோல் நாட்டில், 5,466 கடத்தல் சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்கிறார்கள் அதிகாரிகள்.