April 18, 2017 தண்டோரா குழு
தில்லியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 36-வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். தினமும் நூதன முறையில் பல்வேறு போராட்டங்களை நடத்தி வரும் விவசாயிகள் இன்று சாட்டையால் அடிவாங்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், தென்னக நதிகளை இணைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் தில்லி ஜந்தர் மந்தர் பகுதியில் தொடர்ந்து 36-வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தென்னிந்திய நதிகள் இணைப்பு கூட்டமைப்பு தலைவர் அய்யாகண்ணு தலைமையில் நடைபெற்று வரும் இந்த போராட்டத்தில் மத்திய ,மாநில அரசுக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தினமும் நூதன முறையில் மண் சோறு சாப்பிட்டும், குட்டிக்கரணம் அடித்தும், எலிக்கறி , பாம்புக்கறி சாப்பிட்டும், நிர்வாணமாக தரையில் படுத்து உருண்டும் போராட்டம் மேற்கொண்டனர்.
இந்நிலையில் விவசாயிகள் இன்று மோடியை போன்ற முகமூடி அணிந்த நபர் ஒருவர் தமிழக விவசாயிகளை சாட்டையால் அடிப்பது போல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதனிடையே பிரதமர் மோடி விவசாயிகளை சந்தித்து கோரிக்கை நிறைவேற்றும் வரை போராட்டம் கைவிடப்போவதில்லை என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.