December 19, 2016 தண்டோரா குழு
கோவை அருகே 5 கோடி ரூபாய் மதிப்பிலான அரசு நிலத்தை அதிமுக பொருளாளர் ஆறுமுகம் என்பவர் ஆக்கிரமிக்க முயற்சி மேற்கொண்டு வருவதாகவும், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரியும் பொதுமக்கள் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
கோவை மாவட்டம் சூலூர் அருகே பட்டணம் ஊராட்சியில் தமிழக அரசின் கால்நடை பராமரிப்பு துறைக்கு சொந்தமான 6.50 ஏக்கர் பரப்பளவில் மழையூர் மேட்டுக் குட்டை உள்ளது. இங்கு தண்ணீர் தேக்கி வைப்பதற்காக இந்த குட்டையை அப்பகுதி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு குட்டையில் 2.50 ஏக்கர் நிலத்தை சுத்தப்படுத்தி சைட் பிரிக்கும் முயற்சியில் 61வது வார்டு அதிமுக பொருளாளர் ஆறுமுகம் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து பொதுமக்கள் அப்பகுதியில் ஓன்று திரண்டு அதிமுக நிர்வாகியை முற்றுகையிட்டதையடுத்து அங்கிருந்து பிரிந்து சென்றனர்.
இது குறித்து புகார் அளிக்க திமுக மாவட்ட பிரதிநிதி பட்டணம் செல்வகுமார் தலைமையில் கோவை மாவட்ட ஆட்சியரிடம் அப்பகுதி மக்கள் மனு அளித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், குட்டையில் கரைகளை உடைக்கும் பணியில் பொக்கலைன் இயந்திரத்துடன் ஆறுமுகம் மற்றும் அவரது உதவியாளர்கள் ஈடுபட்டு வருவதாகவும், இதன் மதிப்பு 5 கோடி ரூபாய் மதிப்பு எனவும் அதை ஆக்கிரமிக்க ஆறுமுகம் முயற்சி மேற்கொண்டு வருவதாகவும் குற்றம்சாட்டினார். மேலும், அப்பாவி பொதுமக்கள் 191 பேரிடம் பணம் பெற்றுக் கொண்டு பட்டா பெற்றுத் தர முயற்சிப்பதாகவும், உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். அரசு கால்நடை பராமரிப்பு துறைக்கு சொந்தமான நிலத்தை முறைகேடாக ஆக்கிரமிக்க முயற்சி செய்யும் அதிமுக நிர்வாகி ஆறுமுகம் மற்றும் அவருக்கு உதவிய உள்ளாட்சி பிரதிநிதிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.