January 4, 2017 தண்டோரா குழு
உத்தரப் பிரதேசம், மணிப்பூர், உத்தராகண்ட், பஞ்சாப், கோவா ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டப் பேரவைத் தேர்தல் தேதியைத் தலைமைத் தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி புதன்கிழமை அறிவித்தார்.
புதுதில்லியில் தலைமைத் தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி புதன்கிழமை கூறியதாவது:
5 மாநிலங்களில் 690 தொகுதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் 16 கோடி பேர், வாக்களிக்க உள்ளனர். 1.85 லட்சம் வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. அனைவருக்கும் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அட்டை வழங்கப்பட்டுள்ளன. பெண்களுக்கான பெண் அலுவலர்கள் கொண்ட பிரத்யேக வாக்குச் சாவடிகள் அமைக்கப்படும். ரகசியம் காக்க வாக்கு எந்திர மேஜையின் உயரம் உயர்த்தப்படுகிறது. மாற்றுத் திறனாளிகள் வாக்களிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தேர்தல் தேதி அறிவித்த மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வருகின்றன. ராணுவத்தினர் இணைய வழியில் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் அமைதியாக நடக்க துணை ராணுவப்படையினரின் பாதுகாப்பு கோரப்பட்டுள்ளது. யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிய வசதி செய்யப்பட்டுள்ளது என்றார் நஜீம் ஜைதி.
தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
உத்தரப் பிரதேசத்தில் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. முதல் கட்டமாக 73 தொகுதிகளுக்கு பிப்ரவரி 11ம் தேதி, இரண்டாம் கட்டமாக 67 தொகுதிகளுக்கு பிப்ரவரி 15 ம் தேதி, மூன்றாம் கட்டமாக 12 மாவட்டங்களில் 69 தொகுதிகளில் பிப்ரவரி 19ம் தேதி, நான்காம் கட்டமாக 12 மாவட்டங்களில் 53 தொகுதிகளில் பிப்ரவரி 23 ம் தேதி, ஐந்தாம் கட்டமாக 11 மாவட்டங்களில் 52 தொகுதிகளில் பிப்ரவரி 27ம் தேதி, ஆறாவது கட்டமாக 7 மாவட்டங்களில் 49 தொகுதிகளில் மார்ச் 4ம் தேதி, இறுதியாக, ஏழாவது கட்டமாக 7 மாவட்டங்களில் 40 தொகுதிகளில் மார்ச் 8ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.
கோவா மாநிலத்தில் பிப்ரவரி 4-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்ய கடைசி நாள் ஜனவரி 18ம் தேதி. வேட்பு மனுக்களைத் திரும்பப் பெற கடைசி நாள் ஜனவரி 20ம் தேதி.
மணிப்பூர் மாநிலத்தில் மார்ச் 4 மற்றும் மார்ச் 8 என இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறுகிறது. முதல் கட்ட தேர்தலுக்கு பிப்ரவரி 8ம் தேதி அறிவிக்கை வெளியாகிறது. வேட்பு மனுக்கள் தாக்கல் செய்ய கடைசி நாள் பிப்ரவரி 8ம் தேதி . அவற்றைத் திரும்பப் பெற கடைசி நாள் பிப்ரவரி 18ம் தேதி, 38 தொகுதிகளில் முதல் கட்ட தேர்தல் மார்ச் 4ம் தேதி நடைபெறும்.
இரண்டாம் கட்ட தேர்தலுக்கு பிப்ரவரி 11ம் தேதி அறிவிக்கை வெளியாகிறது. வேட்பு மனுக்கள் தாக்கல் செய்ய கடைசி நாள் பிப்ரவரி 18ம் தேதி. அவற்றைத் திரும்பப் பெற கடைசி நாள் பிப்ரவரி 22ம் தேதி . இரண்டாம் கட்டத் தேர்தல் மார்ச் 8ம் தேதி நடைபெறும்.
உத்தரா கண்ட் மாநிலத்தில் பிப்ரவரி 15ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய கடைசி நாள் ஜனவரி 27, வாபஸ் பெற ஜனவரி 30ம் தேதி கடைசி.
பஞ்சாப் மாநிலத்தில் பிப்ரவரி 4-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான அறிவிக்கை ஜனவரி 11ம் தேதி வெளியாகிறது. வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய ஜனவரி 18 ம் தேதி கடைசி நாள். திரும்பப் பெற ஜனவரி 21 ம் தேதி கடைசி நாள்.
5 மாநிலங்களிலும் பதிவான ஓட்டுகள் வரும் மார்ச் 11ம் தேதி எண்ணப்படும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.