May 3, 2016 தண்டோரா குழு
ஜார்கண்ட் மாநிலத்தில் லடீகர் மாவட்டத்திலுள்ள மகாத்மா காந்தி தேசீய கிராம அபிவிருத்தி தொழிலாளர்கள் உத்திரவாத அமைப்பு தொழிலாளர்கள், தங்கள் 5 ரூபாய் ஊதிய உயர்வை, பிரதம மந்திரிக்குத் திருப்பி அனுப்பித் தங்களது கண்டனத்தைத் தெரிவித்துள்ளனர்.
அந்தப் பணத்துடன் ஒரு கடிதத்தையும் அனுப்பியுள்ளனர்.அந்தக் கடிதத்தின் சாராம்சம்,
இந்த வருடம் ஜார்கண்ட் மாநிலத் தொழிலாளர்களுக்கு அரசு 5 ரூபாய் கூலி உயர்த்தியுள்ளது. மற்ற 17 மாநிலங்களை ஒப்பிடும் போது இது மிகவும் அதிகமே. ஏனெனில் அங்கு 4 ரூபாய்க்கும் கீழே தான் உயர்வு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒடிசாவில் இத்தொழிலாளர்களுக்கு உயர்வே அளிக்கப்படவில்லை. ஏனெனில் அவர்களது வாழ்க்கை நிலை மிக உயர்ந்து விட்டது என்று அரசு கருதியிருக்கலாம்.
7ம் ஊதிய ஆணைக் குழுவின் பரிந்துரைப்படி, அரசு அலுவலர்களின் சம்பளத்திற்கும், ஓய்வூதிய தொகைக்கும், இன்னும் அதிகமாக, 1 லட்சம் கோடி ரூபாய் அரசுக்குத் தேவை.
பாதுகாப்பு வகையில் 2.5 லட்சம் கோடி ரூபாய் தேவை. அது மட்டுமல்லாது பெரிய நிறுவனங்களுக்கு வரி விலக்கு என்ற வகையிலும், குறைந்த விலையில் நில ஒதுக்கீடு, இன்னும் பற்பல உதவிகளுக்கும் அரசுக்கு மிகப் பெரிய தொகை தேவைப்படலாம்.
அத்தேவைகளின் முன்னே இத் தொழிலாளர்களின் அடிப்படை ஊதியம் அரசுக்குப் பொருட்டாகப் படவில்லை போலும்.
ஆகையால் அரசுக்கு ஏற்பட்ட இந்நிதிப் பற்றாக்குறையைக் குறைப்பதற்காக இத்தொழிலாளர்கள் அனைவரும், அரசு தங்களுக்கு அளித்த ஊதிய உயர்வான 5 ரூபாயை கண்டனக் கடிதத்துடன் அனுப்பி வைத்துள்ளனர். இக்கடிதத்தை அரசுக்கு அனுப்பித் தங்களது அதிருப்தியைத் தெரிவித்துள்ளனர்.
இதன் மூலம் அரசு தங்களது அலுவலர்களையும், பெரிய நிறுவனத் தோழர்களையும் மகிச்சியடைச் செய்யலாம் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த லடீகர் மாவட்டத்தில் 1.1 லட்சம் குடும்பங்கள் இந்த NREGA அமைப்பின் கீழ் வேலை செய்கின்றனர். இவர்களது வேலை பொதுத்துறைச் சாலைகளை அமைப்பது, குளங்கள், குட்டைகளை வெட்டுவது போன்றவையாகும். இதில் 43% பெண்கள், மற்றும் 37% ஆதிவாசிகள் ஆவர்.
மானிகா பிளாக்கில் தொடங்கி 8 நிர்வாக அலுவலகத் தொழிலாளர்களும், மே 1ம் தேதி முதல் மே மாதம் முழுவதும் 5 ரூபாயுடன் கடிதத்தையும் அனுப்பவதாகத் தீர்மானித்துள்ளனர்.
கிராம வளர்ச்சித்துறை நிர்வாகம் மார்ச் 29 ம் தேதி இந்த அமைப்பின் கீழ் ஜார்கண்ட், பீகார், மத்தியப்பிரதேசம், சண்டிகார் போன்ற இடங்களில் உள்ள தொழிலாளர்களுக்கு 167 ரூபாயை ஊதியமாக நிர்ணயம் செய்தது.
மத்தியப்பிரதேசத்திலும், சண்டிகாரிலும், 159 ரூபாயிலிருந்து 167 ரூபாயாக (8 ரூபாய் கூடுதலாக) உயர்த்தப்பட்டது.
மானிகாவில் உள்ள நாரிகா சஹாயதா கேந்திரா செயலர் ஜேம்ஸ் ஹீரஞ்ச் கூறுகையில், அரசு தொழிலாளர்கள் நலனுக்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை, சட்டப்படி 15 நாள் வேலையும் அளிப்பதில்லை, அடிப்படை ஊதியத்தையும் கொடுப்பதில்லை என்றார். இந்த வருடம் 5 ரூபாயும், கடந்த வருடம் 4 ரூபாயும் ஊதிய உயர்வு அளித்துள்ளனர். ஆனால் 2014 ம் வருடம் 20 பைசா உயர்த்தியுள்ளனர்.
எந்த அடிப்படையில் உயர்வு, தாழ்வுகளைக் கணக்கிடுகிறார்கள் என்பதே தெரியவில்லை என்றார்.
சியாம் சிங் என்னும் ஆதிவாசித் தொழிலாளி, தங்களுடைய கடினமான உடல் உழைப்பை அரசு மதிக்காமல், குறைந்த ஊதிய உயர்வை வழங்கியுள்ளது. ஆனால் அரசு அதிகாரிகளுக்கு மட்டும் வாரி வழங்கியுள்ளது என்றார்.
பொருளாதார வல்லுநர் மகேந்திர தேவ் தலைமையிலான கிராம வேலைவாய்ப்புப் புனராய்வு அமைப்பு, 2014 ம் ஆண்டு இவ்வூதியத்தை அந்தந்த மாநிலத்தின் அடிப்படை ஊதியத்திற்கு உயர்த்த வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளது. ஆனால் இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை,
இந்த ஊதிய உயர்வு அந்தந்த மாநிலத்தின், விவசாயப் பொருட்களின் விலை உயர்வு, சில்லறை வர்த்தகம், மற்றும் செய்யும் வேலை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது. ஆனால் பொருளாதார வல்லுநர்கள் அவ்வடிப்படையின் படி கணிப்பது சரியானதாக இருக்காது, அதனால் பாதிக்கப்படுவது கிராமத்தின் ஏழை மக்களே என்று கூறியுள்ளார்.