May 22, 2017 தண்டோரா குழு
கறுப்பு பணத்தை ஒழிப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி பழைய ரூ.500, 1000 நோட்டுக்கள் செல்லாது என அறிவித்தார். இதனால் கறுப்பு பணத்தை பதுக்கிய பலர், பழைய ரூபாய் நோட்டுக்களை என்ன செய்வதென்று தெரியாமல் தெருக்களில் வீசியும் கிழித்து குப்பைத் தொட்டிகளில் எறிந்தும் வருகின்றனர். ரிசர்வ் வங்கியே பழைய நோட்டுக்களை என்ன செய்வதென்று தெரியாமல் திண்டாடி வருகிறது.
இந்நிலையில், ஒடிசா மாநிலம் நியாபடா மாவட்டத்தைச் சேர்ந்தவர் லக்ஷ்மன் துந்தி என்ற 17 வயது இளைஞர். விவசாயின் மகனான இவருக்கு அறிவியலில் ஆர்வம் அதிகம். இவர் செல்லாது என அறிவிக்கப்பட்ட பழைய ரூ.500 நோட்டில் இருந்து மின்சாரம் தயாரித்து சாதனை படைத்துள்ளார்.
தானே பல்ப் தயாரித்து, விற்பனை செய்து அதில் வரும் வருமானத்தைக் கொண்டு கல்லூரியில் படித்து வருகிறார்.
இச்சாதனை குறித்து லக்ஷ்மன் கூறுகையில்,
செல்லாத ரூபாய் நோட்டை கிழித்து எறிந்தேன். அப்போது , சூரிய ஒளியில், ரூபாய் நோட்டின் மீது இருந்த சிலிகான் பூச்சு இருப்பதைக் கண்டேன். இதையடுத்து அந்த சிலிகான் பூச்சில் எலக்ட்ரிக் வயரை இணைத்து, டிரான்ஸ்பார்மருடன் பொருத்தி, மின்சாரத்தை தயாரித்தேன். இதன் மூலம் ஒரு 500 நோட்டில் இருந்து 5 வோல்ட்ஸ் மின்சாரம் தயாரிக்க முடியும். இதனை தயாரிக்க எனக்கு 15 நாட்கள் மட்டுமே ஆனது என்றார்.
லக்ஷ்மன் இதனை முதலில் தனது கல்லூரியில் செய்து காட்டியுள்ளார். ஆனால், அங்கு இதனை யாரும் கண்டு கொள்ளவில்லை. இதனை தொடர்ந்து பிரதமர் அலுவலகம் மற்றும் முதல்வருக்கு அவர் கடிதம் அனுப்பியுள்ளார். இதற்கடையில், இந்த தகவலை அறிந்த பிரதமர் அலுவலகம், இத்திட்டம் குறித்து ஆய்வு செய்து, அறிக்கையாக தயாரித்து அனுப்பும்படி ஒடிசா அரசுக்கு ஏப்ரல் 12ம் தேதி கடிதம் அனுப்பியது. ஒடிசா அரசும் சம்பந்தப்பட்ட துறைக்கு அறிவுறுத்தி, அறிக்கை தயாரித்து மே 17 அன்று பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பி வைத்துள்ளது.
எனது கண்டுபிடிப்பை பிரதமர் பாராட்டினால் அதுவே எனக்கு கிடைத்த பெருமையாக நினைப்பேன் என்கிறார் லக்ஷ்மன். எனினும் இத்தகவலை பரவ துவங்கியதை அடுத்து லக்ஷ்மனனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.