April 18, 2022 தண்டோரா குழு
சாலை விரிவாக்கம் என்கிற பெயரில் வெறும் 6 கிலோ மீட்டர் தூரத்தை மிச்சப்படுத்த 2800 ஏக்கர் பாசன நிலங்களை அழிக்க முற்படும் ஒன்றிய, மாநில அரசின் நடவடிக்கையை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் உரையாற்றினார்.
கோவை மாவட்டம் குரும்பபாளையம் முதல் சத்தியமங்கலம் வரையிலான புறவழி பசுமை சாலை அமைப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் சுமார் 800 ஏக்கர் விளைநிலங்கள் பாதிக்கப்படுகிறது. இதேபோன்று கரூர் முதல் கோவை வரை 6 வழி பசுமை சாலை,அதையொட்டி கோவை கிழக்கு புறவழிச்சாலை 2,400 கோடி ரூபாய் செலவில் அமைக்க, முடிவு செய்யப்பட்டு திட்ட அறிக்கை நிலையில் உள்ளது. இத்திட்டத்தினால் 3,000 ஏக்கர் பரப்பளவு விளைநிலங்கள் பாதிக்கப்படுகிறது.
விவசாயிகள், பொதுமக்களின் கடும் எதிர்ப்பையும் மீறி, ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவு விளைநிலங்களை அழித்து இத்திட்டங்களை செயல்படுத்த மத்திய, மாநில அரசுகள் முயற்சி செய்வதை கண்டித்தும், ஏற்கனவே உள்ள சாலைகளை தேவையான அளவு விரிவாக்கம் செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
முன்னதாக ஆர்ப்பாட்டத்தை துவக்கிவைத்து மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் பேசுகையில்,
ஒன்றிய அரசு கொண்டு வருகிற திட்டங்கள் பெரும்பாலும் மக்களுக்கு விரோதமான திட்டங்களாகவே இருக்கிறது. இது தவறு என பேசினால் நீங்கள் வளர்ச்சிக்கு எதிராக உள்ளீர்கள் என்கின்றனர். எங்கள் கேள்வி எல்லாம் உங்களின் வளர்ச்சிக்கெல்லாம் விவசாயிகள் மட்டும்தான் தியாகம் செய்ய வேண்டுமா என்பதே, பெட்ரோல் குழாய் பதிக்க, மின்சார கேபிள் கொண்டு செல்ல, கெயில் குழாய் பதிக்க என தொடர்ந்து விவசாயிகள் நிலம் கொடுத்தார்கள், இப்போதுகூட உயர் அழுத்த மின்சார கேபிள்கள் கொண்டு செல்ல நிலம் கொடுத்துள்ளார்கள்.
தேசத்தின் மொத்த வளர்ச்சிக்கும் விவாசயிகள் மட்டும்தான் தியாகம் செய்ய வேண்டுமா, இதர துறைகள் தியாகம் செய்யாத என்பதே கேள்வி. இப்போது இங்கு நடைபெறும் இயக்கங்கள்கூட சாலை விரிவாக்கத்திற்கு ஏராளமான மாற்று திட்டங்கள் இருக்கும் நிலையில் அதனை விடுத்து ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாயிகளின் பாசன நிலங்களை அழிப்பதற்கு எதிராகத்தான் இந்த போராட்டங்கள் நடைபெறுகிறது.
ஒன்றிய அரசின் சார்பில் கரூர் கோவை பைபாஸ் சாலை போடுவதற்கு 2800 ஏக்கர் பாசன நிலங்களை கையகப்படுத்துவோம் என்கிறார்கள். கடந்த 8 ஆண்டுகளாக விவசாயிகள் போராடி வருகிறார்கள். நாங்கள் இந்த திட்டத்தினால் என்ன பயன் என்பது குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்பிய போது தேசிய நெடுஞ்சாலை துறையின் பொறியாளர்கள் அதிகாரிகள் ஆய்வு செய்து கொடுத்த அதிகாரப்பூர்வ அறிக்கையில் வெறும் 6 கிலோ மீட்டர்தூரம்தான் மிச்சமாகும் என்பது தெளிவாகுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வமாக கடிதமும் உள்ளது. வெறும் 6 கிலோ மீட்டர் தூரம் மிச்சப்படுத்துவதற்கு 2800 ஏக்கர் பாசன நிலங்களை அழிப்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். ஒருபோதும் ஏற்கமுடியாது.
இதேபோல அன்னூர் சத்திய மங்கலம் சாலை விரிவாக்கத்திற்கு புதிய பைபாஸ் சாலை அமைக்க 800 ஏக்கர் நிலம் எடுப்பதற்கு முடிவெடுக்கிறார்கள். இதுதேவையில்லாத ஒன்று. ஏற்கனவே உள்ள சாலையை விரிவாக்கம் செய்தும், போக்குவரத்து நெரிசல் உள்ள பகுதிகளான அன்னூர், புளியம்பட்டி, சக்தியமங்கலம் ஆகிய இடங்களில் மேம்பாலங்களை கட்டினாலே போதுமானது. வெகுவான போக்குவரத்து நெரிசல் குறையும். இதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்தே இந்த ஆலோசனையை முன்வைக்கிறோம்.
இதனை விடுத்து விவசாயிகள் தியாகம் செய்ய வேண்டும் என பேசிக்கொண்டிருந்தால் ஒருபோதும் ஏற்கமுடியாது. கோவை மாவட்ட ஆட்சித்தலைவர், நெடுஞசாலை துறை அமைச்சர் ஆகியோருடன் தொடர்ந்து இதுகுறித்து விளக்கியுள்ளோம். இதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். இதுகுறித்து தொடர்ந்து நாடாளுமன்றத்திலும் குரல் எழுப்பியுள்ளேன். மக்கள் மன்றத்திலும் குரல் கொடுத்து வருகிறோம். விவசாயிகளின் வாழ்வாதரம் பாதுக்கக்க மார்க்சிஸ்ட் கட்சியும், கோவை மக்களின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினரான நானும் எப்போதும் உங்களுடன் நிற்பேன் என்றார்.
கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கோவை மண்டல விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் உழவர் உழைப்பாளர் ‘கட்சியின் மாநில தலைவர் டாக்டர் கே.செல்லமுத்து, தபெதிக பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன், தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில பொருளாளர் தங்கராஜ், தமிழக விவசாயிகள் பாதுகாப்புக்குழுவின் நிறுவனர் வழக்கறிஞர் ஈசன், கொங்கு மண்டல விவசாயிகள் பாதுகாப்புக்குழு ஒருங்கினைப்பாளர் வி.பழனிச்சாமி, கொங்கு மண்டல விவசாயிகள் நலச்சங்கத்தின் தலைவர் ஏ.ஆர்.முருகசாமி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் வி.ஆர்.பழனிச்சாமி உள்ளிட்ட தலைவர்கள் உரையாற்றினர்.