March 7, 2023 சிராஜ் தீன்
வனப்பகுதிகளில் இருந்து வெளியேறி மக்களை அச்சுறுத்தும் காட்டு யானைகளை பிடிக்க உதவும் கும்கி யானைகளில் தமிழ்நாடு வனத்துறையின் அடையாளமாக திகழ்கிறது கும்கி யானை கலீம்.
வனப்பகுதிகளில் இருந்து வெளியேறும் ஆன் யானைகள் காடுகளில் தாயை பிரிந்த ஆண் யானைகள் மீண்டும் தாயுடன் சேர்க்க முடியாத நிலை ஏற்படும் போது அவைகளை வனத்துறையினர் பயிற்சி கொடுத்து கும்கிகளாக மாற்றிவிடுகின்றனர்.அந்த வகையில் 1972-ல் சத்தியமங்கலம் வனப்பகுதியில் தாயை பிரிந்த 7 வயது யானையை பிடித்த வனத்துறை பொள்ளாச்சி டாப்சிலிப்பில் வைத்து கும்கி யானையாக்க பயிற்சிகளை வழங்கியது.
கலீம் என்று பெயரிடப்பட்ட அந்த யானை தான் பங்கேற்ற பணிகளில் எல்லாம் வெற்றி கண்டு நிற்கிறது, 60 வயதிலும் கம்பிரமாக தோற்ற மளிக்கும் கும்கி கலீம் சூழலுக்கு ஏற்றார் போல் செயல்படும் தன்மையுடையது, தமிழ்நாடு மட்டுமல்லாது கேரளா, கர்நாடகா, அசாம் உள்ளிட்ட மாநிலங்களிலும் வனத்தை விட்டு வெளியேறிய காட்டு யானைகளை மீண்டும் வனத்திற்குள் விரட்டுவது மனித உயிர்களை கொள்ளும் யானைகளை பிடிப்பது என அனைத்து பணிகளிலும் கும்கி கலீம் சிறப்பாக செயல்பட்டுள்ளது.
திருவண்ணாமலையில் ஊருக்குள் புகுந்த 6 யானைகள்,பொள்ளாச்சியை மிரட்டிய அரிசி ராஜா,மற்றும் சின்னத்தம்பி, விநாயகா உள்ளிட்ட யானைகளை மயக்க ஊசி செலுத்தி பிடித்ததில் கும்கி கலீமின் பங்கு மிக முக்கியமானது.
இந்நிலையில்,காட்டு யானைகளுக்கு சிம்மசொப்பனமாக விளங்கிய கலீம் பொள்ளாச்சி கோழிமுட்டி யானைகள் முகாமின் கும்கி யானையான கலீம் இன்று 07/03/2023 தனது 60வது வயதில் ஓய்வு பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.