June 9, 2016
தண்டோரா குழு
இங்கிலாந்தில் சாலையில் திடீர் என்று ஏற்பட்ட 66 அடி பள்ளத்தால் குடியிருப்பு வாசிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இங்கிலாந்து நாட்டின் தலைநகரான லண்டன்னில் வடக்கு பகுதியில் உள்ள ஹீர்த்போர்சியர் என்னும் இடத்தில் உள்ள செயின்ட் அல்பான்ஸ் சாலையில் கடந்த வாரம் 32 அடி ஆழமும் 66 அடி அகலமும் கொண்ட ஒரு பள்ளம் திடீர் என்று உருவாகியது.
சாலையில் ஏற்பட்டுள்ள இந்தப் பள்ளத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அப்பகுதியில் உள்ள 50க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
இது குறித்து இங்கிலாந்து புவியியல் ஆய்வாளர் பீட்டர் ஹோப்ஸ் கூறும்போது, இது முறையற்ற சீதோசன நிலையால் ஏற்படுவது. இந்த முறை இப்பகுதியில் வறட்சி நிலவியதாலும், நிலத்தடி நீர் மட்டம் 13 அடி குறைந்ததாலும், கீழே இருந்த பாறைகள் இடமாற்றம் அடைந்து அங்கு வெற்றிடம் உருவாகியிருக்கும். அவ்வாறு வெற்றிடம் உருவாகும்போது, அவற்றை நிரப்பக் கடினமில்லாத தரைப் பகுதி முழுவதும் அப்படியே பூமிக்கடியில் செல்லும். இதனால் அங்கு வட்ட வடிவமாக ஒரு பள்ளம் தோன்றுகிறது. இதுவே நிலத்திற்கு அடியில் அதிகப்படியான வெற்றிடம் ஏற்பாட்டால் அதன் விளைவு நினைத்துப் பார்க்க முடியாத அளவில் இருக்கும் எனவும் தெரிவித்தார்.
மின்சாரம், தண்ணீர், போன்றவை தடைப்பட்டு உள்ளன. மீட்புப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இப்பணியில் முதல் கட்டமாக 5 குடியிருப்புகளில் உள்ள 20க்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டுப் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக தீயணைப்புத்துறையை சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறியது, சாலையில் ஏற்பட்டுள்ள இந்த திடீர் பள்ளத்தால் நல்லவேளையாக உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. எனினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அருகில் உள்ள 20க்கும் மேற்பட்ட குடியிருப்பு வாசிகள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
மேலும் 50க்கும் மேற்பட்ட குடியிருப்பு பகுதிகளில் அடிப்படை வசதிகள் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். சாலையைச் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறதாகவும் இயல்பு நிலைக்குத் திரும்ப இன்னும் சில வாரங்கள் ஆகும் என்று தெரிவித்துள்ளார்.