August 20, 2016 தண்டோரா குழு
கேரளாவில் 65 வயது மூதாட்டியை அப்பகுதியில் இருந்த 50 தெரு நாய்கள் கடித்து குதறிக் கொன்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள புல்லுவில்லாவில் தெருநாய்கள் அதிக அளவில் அட்டகாசம் செய்துவருவதாக அப்பகுதி மக்கள் அடிக்கடி புகார் அளித்து வந்திருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், 65 வயதான சிலுவம்மா என்ற மூதாட்டி நேற்று இரவு கடற்கரைக்கு சென்றுள்ளார். இரவு முழுவதும் வீட்டிற்குத் தாய் வராததை அறிந்த அவரது மகன் செல்வம், வெளியில் சென்று தேடிப்பார்த்துள்ளார்.
அப்போது கடற்கரையில் சுமார் 50க்கும் மேற்பட்ட தெருநாய்கள் அவரது தாயை கடித்துக் கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து காப்பற்ற முயன்றுள்ளார். ஆனால் நாய்கள் இவரையும் கடிக்க முற்பட்டுள்ளது.
இதையடுத்து செல்வம் கடலில் குதித்து தப்பியுள்ளார். பின்னர், வேறு ஒரு பகுதிக்கு நீந்திச்சென்று கரையேறி மற்றவர்களை அழைத்து வந்து பார்த்த போது நாய்க் கடியால் ரத்த வெள்ளத்தில் மிதந்த சிலுவம்மா பரிதாபமாக உயிரிழந்தது தெரியவந்துள்ளது.
முன்னதாக அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண் தெருநாய்கள் கடித்து குதறியதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.