March 23, 2016 வெங்கி சதீஷ்
இந்தியாவின் அடையாளம் எனக் காண்பிக்கப்படும் தொழிலதிபர்கள் அனைவரும் தற்போது உலகளவில் பெயர்பெற்று விளங்குகின்றனர். குறிப்பாக முகேஷ் அம்பானி, அணில் அம்பானி மற்றும் ரத்தன் டாட்டா உள்ளிட்டவர்கள் மிகப் பிரபலமாக உள்ளனர்.
அதே வரிசையில் இடம்பெற வேண்டிய விஜய்மல்லையா தன்னுடைய தவறான கொள்கைகளால் தற்போது வங்கிகளில் வாங்கிய கடனை கட்டமுடியாமல் தவித்து வந்ததோடு தற்போது இங்கிலாந்து சென்று தங்கியுள்ளார். அவர் நாட்டின் முக்கியமான வங்கிகளில் 9,000 கோடி ரூபாய் கடன் வாங்கியுள்ளார். ஆனால் தற்போது அதைக் கட்டமுடியாமல் தவித்து வருகிறார். பத்திரிக்கைகள் அனைத்தும் அவர் வெளிநாடு தப்பிவிட்டதாக செய்தி வெளியிட்டுள்ளன.
இதைச் சம்பந்தப்படுத்தி பல்வேறு நிகழ்வுகள் நடந்து வருகிறது. குறிப்பாகச் சமூக வலைத்தளங்களில் இது குறித்து கிண்டல்களும் கேலிகளும் வந்த வண்ணம் உள்ளன. உதாரணமாக ஒரு தம்பதியினர் வங்கிக்குச் சென்று கடன் கேட்பார்கள் அப்போது எது போன்ற கடன் வேண்டும் எனக் கேட்கும்போது விஜய்மல்லையா மாடல் வேண்டும் எனக் கேட்பார்கள்.
அது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. மேலும் ஒரு சம்பவம் இந்தியா முழுவதும் திரும்பிப்பார்க்க வைத்துள்ளது. மும்பை புலேஷ்வேர் பகுதியைச் சேர்ந்த பிரேமலதா பன்சாலி(44) என்பவர் மும்பை ரயிலில் பயணம் செய்துள்ளார்.
அப்போது டிக்கெட் பரிசோதகர் சோதனை செய்தபோது அவர் எடுக்கவேண்டிய 10 ரூபாய் டிக்கெட்டை எடுக்காமல் பயணம் செய்துள்ளார். அதையடுத்து பரிசோதகர் அவருக்கு அபராதமாக 260 ரூபாய் விதித்துள்ளார். ஆனால் அதைக் கட்ட மறுத்த அவர் பரிசோதகரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது அவர் கொடுத்த விளக்கத்தைக் கேட்ட அவருக்கு தலைச்சுற்றலே வந்துள்ளது. பின்னர் அவர் எல்பின்ஸ்டோன் ரயில் நிலையத்தில் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார். அங்கும் அவர்கள் கேட்ட கேள்விக்கு முதலில் விஜய்மல்லையா ஏமாற்றிய 9,000 கோடி ரூபாயைத் திரும்ப கட்டச்சொல்லுங்கள் அப்போதுதான் நானும் டிக்கெட் எடுப்பேன் என அடம்பிடித்துள்ளார்.
ரயில்வே காவல்துறையில் உள்ள பெண் காவலர்கள் மற்றும் அனைத்து அதிகாரிகளும் அவரை சுமார் 12 மணிநேரம் சமாதானப்படுத்தியும் அவர் சமாதானம் அடையவில்லை. பின்னர் நீதிமன்றத்தில் ஆஜராகவேண்டும் என அதிகாரிகள் கூறியதை அடுத்து அவர் நான் அங்கும் வாதாடுவேன் அப்போது நீங்கள் என்னிடம் நடந்துகொண்ட முறை குறித்தும் அவர்களிடம் தெரிவிப்பேன் எனத் தெரிவித்துள்ளார்.
எனவே விஜய்மல்லையா பிரச்சனை தற்போது சாதாரண மக்களும் கூட எதிரொலிக்கத் துவங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.