October 8, 2016 தண்டோரா குழு
கோவை நரசிம்மநாயக்கன் பாளையம் அருகே பழையூர் பகுதியில் உள்ள பழமைவாய்ந்த மசராயர் பெருமாள் கோவில் இடிந்து விழும் அவல நிலையில் உள்ளதால் மீண்டும் பூஜை நடத்த மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள நரசிம்ம நாயக்கன்பாளையம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பழையூர் என்ற கிராமத்தில் அங்காளம்மன் கோவிலின் அருகில் உள்ளது 80 ஆண்டுகள் பழமைவாய்ந்த மசராயர் பெருமாள் கோவில்.
பல ஆண்டுகளாக பக்தர்கள் வருகையால் சிறப்பாக செய்யப்பட்டு வந்த இக்கோயில் தற்போது எந்த பூஜைகளும் நடைபெறாமல் பூட்டியே உள்ளது. உபயோகத்தில் இல்லாத காரணத்தினால் கட்டிடம் இடிந்து விழும் நிலையில் உள்ளது. தற்போது இக்கோயில் புதர்கள் மண்டி பாம்புகளின் கூடாரமாக மாறி உள்ளது.
இது குறித்து அப்பகுதியை சேர்ந்த ரங்கநாதன் என்பவர் கூறுகையில்..
நான் சிறு வயது முதல் இப்பகுதியில் வசித்து வருகிறேன் . மக்கள் நெருக்கம் அதிகம் இல்லாத அந்த நாட்களில் மசராயர் கோவிலுக்கு பொதுமக்கள் தினமும் வந்து வழிப்பட்டு செல்வார்கள். தினமும் இரு வேளை பூஜைகள் நடைபெறும். வெளியூரில் இருந்தும் ரசிம்ம நாயக்கன்பாளையத்தைச் சுற்றியுள்ள 18 ஊர் பொதுமக்களும் இக்கோவிலுக்குத் தவறாமல் வந்து செல்வார்கள்.
அதேபோல் ஏழு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊர் பொதுமக்கள் ஒன்று கூடி திருவிழா நடத்துவார்கள். மேலும், வாணவேடிக்கை, பட்டாசுகள், கலைநிகழ்ச்சியென மிகவும் சிறப்பாக நடைபெறும். ஆனால், கடந்த சில வருடங்களாக எந்த ஒரு நிகழ்ச்சியும் நடைபெறவில்லை. பூஜைகள் மட்டும் நடை பெற்று வந்தது. அதுவும் கடந்த பத்து வருடங்களாக பூஜைகள் செய்யப் படவில்லை கோவில் பூட்டியே உள்ளதாக அவர் கூறினார்.
தண்டபாணி என்பவர் தெரிவிக்கையில்..
மசராயர் கோவில் அக்காலத்தில் இப்பகுதி விவசாயிகளால் உருவாக்கப்பட்டது . கோவில் நிர்வாகிகள் பலர் வெளியூரில் தொழில் செய்யச் சென்றுவிட்டனர். அதன் பின்னர் யாரும் கோயிலின் நிர்வாகத்தை நடத்த முன்வரவில்லை. தற்போது, ஊர் பொதுமக்கள் நாங்கள் தயாராக உள்ளோம் . இந்து சமய அறநிலைய துறை அதிகாரிகள் முன்வந்து மீண்டும் புதுப்பித்து கோவிலில் பூஜைகள் நடைபெற ஏற்பாடு செய்ய வேண்டும் எனத் தெரிவித்தார்.
மசராயர் பெருமாள் கோவிலுக்கு சொந்தமாக மூன்று ஏக்கர் நிலம் உள்ளது. இன்றைய மதிப்பில் பல கோடிகள் மதிப்புடையதாகும். இவ்வளவு சொத்திருந்தும் கோவிலைப் புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கமால் அதிகாரிகள் காலம் தாழ்த்தி வருகின்றனர்.
இது குறித்து நரசிம்மநாயகண் பாளையம் பஞ்சாயத்துத் தலைவர் ஆனந்த் கூறும்போது,
மசராயர் பெருமாள் கோவில் புதுப்பித்து மீண்டும் பூஜைகள் நடைபெற இந்து சமய அதிகாரிகள் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் . அவர்கள் கட்டுபாட்டில் உள்ளதால் உள்ளூர் நிர்வாகம் இதில் தலையிட முடியாது எனத் தெரிவித்தார்.
ஊர் சொந்தங்கள் ஒன்று கூடி கோவிலில் மீண்டும் பூஜைகள் நடைபெற்று திருவிழாக்கள் நடத்தப்படவேண்டும் எனவும் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதும் இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.